நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தினகரனின் அமமுக கட்சி படுதோல்வி அடைந்தது. இதனால் அக்கட்சியிலிருந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மாற்று கட்சியில் இணைந்து வருகின்றனர். குறிப்பாக செந்தில்பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன், இசக்கி சுப்பையா, சசிரேகா மற்றும் சிலர் தினகரன் கட்சியில் இருந்து வெளியேறியது தினகரனுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இதனையடுத்து நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் கிராமப்புற பகுதிகளில் அமமுக கட்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனால் ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஒன்றிய கவுன்சிலரில் 90க்கும் அதிகமான இடங்களை கைப்பற்றி அனைத்து அரசியல் கட்சியினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேபோல் அமமுக கைப்பற்றிய பெரும்பாலான இடங்கள் அதிமுக செல்வாக்கு மிகுந்த இடங்கள் என்றும் சொல்லப்பட்டது.
இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு அமமுகவில் பல்வேறு நடவடிக்கைகளை தினகரன் எடுத்து வருவதாக சொல்கின்றனர். இதனையடுத்து அமமுகவின் புதிய நிர்வாகிகளை, அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நியமித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், நீலகிரி மற்றும் ஒருங்கிணைந்த கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் பொறுப்பாளராக சி. சண்முகவேலு, துரைசாமி நியமிக்கப்பட்டுள்ளனர். கோவை மாநகர் வடக்கு, கோவை மாநகர் தெற்கு, கோவை புறநகர் என கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த கோவை மாவட்டக் கழகப் பணிகளை விரைந்து செய்வதற்கு ஏதுவாக இன்று முதல் கழக அமைப்பு ரீதியாக கோவை கிழக்கு மாவட்டம், கோவை மேற்கு மாவட்டம், கோவை மத்திய மாவட்டம், கோவை வடக்கு மாவட்டம் மற்றும் கோவை தெற்கு மாவட்டம் என ஐந்து மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. கோவை கிழக்கு மாவட்ட செயலாளராக கிருஷ்ணகுமார், கோவை தெற்கு மாவட்ட செயலாளராக சேலஞ்சர் துரை, கோவை மத்திய மாவட்ட செயலாளராக அப்பாதுரை, கோவை வடக்கு மாவட்ட செயலாளராக அலாவுதீன், கோவை தெற்கு மாவட்ட செயலாளராக சுகுமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் கோவை மத்திய மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள அப்பாதுரை, அமைப்பு செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார் என தெரிவித்துள்ளார்.