
கோவை மாவட்டம், உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே, நேற்று அதிகாலை 4 மணி அளவில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று வெடித்து சிதறியது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அங்கு விரைந்த காவல்துறையினர் வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு தீயை அணைத்தனர்.
இந்த உயிரிழந்தவர் உக்கடம் பகுதியைச் சேர்ந்த ஜமேசா முபீன் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர் பழைய துணி விற்பனை தொழில் செய்து வந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்பொழுது அவருடைய பின்னணி குறித்து தனிப்படை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். உக்கடம் ஜி.எம் நகர், கோட்டைபுதூர் பகுதியைச் சேர்ந்த இவரிடம் ஏற்கனவே தேசியப் பாதுகாப்பு முகமை அதிகாரிகள் விசாரணை செய்ததும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் கோவையில் காரில் சிலிண்டர் வெடித்த சம்பவத்தில் மூலக்காரணமானவர்களை சட்டத்தின் முன்னே உடனே நிறுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். கோவை சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் என்ன பதில் கூறப்போகிறார்? என கேள்வி எழுப்பியுள்ள தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஆட்சியின் போது அமைதியான தமிழகமாக காட்சியளித்த தமிழ்நாட்டில் எப்போது எல்லாம் திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்கிறதோ அப்போதெல்லாம் தமிழகத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ச்சிகள் என்பது சர்வ சாதாரணமாக நடைபெறும் நிகழ்வாகவும், தொடர்கதையாகவும் உள்ளது. சிலிண்டர் வெடித்தது விபத்தா அல்லது சதிவேலையா என்பதை உடனே போலீசார் கண்டறிய வேண்டும்' என வலியுறுத்தியுள்ளார்.