டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டு பாமக சார்பில் சென்னை துறைமுகத்தை ஒட்டிய கடற்கரைச் சாலையில் உள்ள அவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த ஜி.கே. மணி, “தமிழகத்தில் வேகமாக வளரும் கட்சி பாமக. பாமகவிலிருந்து ஒதுங்கி இருந்தவர்கள் மற்றும் செயல்படாமல் இருந்தவர்கள் எல்லாம் செயல்படத் துவங்கியுள்ளனர். அதிக இளைஞர்களைக் கொண்ட காட்சி பாமக. இது அன்புமணிக்கு வலிமையைச் சேர்க்கிறது.
நாட்டின் மூத்த தலைவர் ராமதாஸ், தமிழகத்தில் அவர் செல்லாத இடங்கள் இல்லை. அன்புமணியின் செயல் திட்டங்கள் மக்களை ஈர்த்துள்ளது. தற்போது கூட்டணி குறித்துப் பேசவேண்டிய நிலை எழவில்லை.
மாநில அரசுக்கு மக்களின் பிரச்சனையைத் தீர்க்க வேண்டிய கடமையும் பொறுப்பும் இருக்கிறது. ஆன்லைன் சூதாட்டம் என்பது ஒட்டுமொத்த மக்களின் குரலாக அதன் தடை சட்டமாக்கப்படுகிறது. சட்டமன்றத்தில் இல்லாமல் அமைச்சரவையிலும் அவசரச் சட்டம் கொண்டுவரப்பட்டு அது சட்டமன்றத்திலும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த சூதாட்டத்தில் தற்கொலைச் சாவுகள் பொருளாதார இழப்புகள் அதிகமாக உள்ளது. ஆளுநர் இதை எல்லாம் கருத்தில் கொண்டு ஒப்புதல் அளிக்க வேண்டும். ஆளுநர் ஒப்புதல் அளிக்காதது வருத்தத்தையும் ஏமாற்றத்தையும் அளிக்கிறது. இனியாவது மக்களின் உணர்வுகளை மதித்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” எனக் கூறினார்.