
பெண்களைப் போற்றும் விதமாக, உலகம் முழுவதும் மார்ச் 8ஆம் தேதி ‘உலக மகளிர் தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தை முன்னிட்டு, பல்வேறு அரசியல் தலைவர்கள் பெண்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகரும், தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவருமான விஜய் மகளிர் தினத்திற்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டார். அதில் அவர், தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பாக இல்லை என்று கூறி திமுக அரசு எனக் குறிப்பிட்டு தமிழக அரசை விமர்சித்துப் பேசியிருந்தார்.
இதற்கிடையில், உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்குப் பாதுகாப்பை வழங்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தமிழக வெற்றிக் கழகக் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதில், போராட்டம் நடத்தி த.வெ.க தொண்டர்கள் சிலரை போலீசார் கைது செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், போராட்டம் நடத்திய த.வெ.க தொண்டர்கள் கைது செய்யப்பட்டதற்கு த.வெ.க தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘தமிழ்நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாமலும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியும் வரும் நிலையில், அவர்களுக்கு முழுமையான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அவசியமாகிறது. பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் எனத் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி, உலக மகளிர் தினமான இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் கழக மகளிர் அணியினர் மற்றும் தோழர்கள் அறவழியில் அடையாளப் போராட்டத்தை நடத்தினர்.
தங்களுக்கான உரிமை கிடைக்காத பட்சத்தில் அதை வலியுறுத்திக் கேட்டுப் பெற வேண்டிய நிலையில் தமிழ்நாட்டுப் பெண்கள் இருப்பதால்தான் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக இந்த அறவழி அடையாளப் போராட்டமானது நடைபெற்றது. ஆனால் தமிழக மக்கள் தங்களின் தேவைகளுக்காகக் கூட போராட்டத்தை நடத்தக் கூடாது என்ற அராஜகப் போக்குடன் தமிழக அரசு, கழக மகளிர் மற்றும் தோழர்களைக் கைது செய்திருக்கிறது. இதை வன்மையாகக் கண்டிக்கிறேன். தமிழ்நாடு முழுவதும் கைது செய்யப்பட்டுள்ள தமிழக வெற்றிக் கழகத் தோழர்களையும் மகளிரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனத் தமிழ்நாட்டு அரசை வலியுறுத்துகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.