அடுத்த ஆண்டு நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டினை தலைமையேற்று நடத்தும் வாய்ப்பு இந்தியாவிற்குக் கிடைத்துள்ளது. மாநாட்டைச் சிறப்பாக நடத்த முடிவு செய்துள்ளது மத்திய அரசு. இதற்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் கலந்துகொள்ள எடப்பாடி பழனிசாமி நேற்று காலை சென்னையிலிருந்து விமானம் மூலம் டெல்லி சென்றார்.
எடப்பாடி பழனிசாமியின் இந்தப் பயணத்தின் மூலம் பாஜக அதிமுகவின் எடப்பாடி பழனிசாமிக்கு முழு அங்கீகாரத்தையும் கொடுத்துள்ளதாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “அதிமுக வலிமையாகவும் ஒரு முகமாகவும் இருக்கிறது என்பதற்கு ஜி20 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக எடப்பாடி பழனிசாமி அழைக்கப்பட்டுள்ளார். நம்மை அழைத்திருக்கிறார்கள் என்று சொன்னால் நமக்கு முழு அங்கீகாரத்தையும் அளித்துள்ளார்கள் என்று பொருள். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர் சிறப்பான முறையில் மகிழ்ச்சியுடன் பிரதமரை வாழ்த்தியுள்ளார். இது நமக்கு கிடைத்த வெற்றியாகக் கருதலாம் .
கழகத் தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து இருக்கும் இயக்கம் அதிமுக. 98.5% தொண்டர்கள் ஒரே இடத்தில் ஒருங்கிணைந்து இருக்கின்றனர். இதனை எடுத்துக் காட்டுகிற வகையில்தான் ஜி20 மாநாட்டில் அவர் கலந்துகொண்டார்.” எனக் கூறினார்.