தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பாக இன்று ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களிலும் சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து ஆர்பாட்டங்கள் நடைபெற்றது. ஈரோட்டில் சூரம்பட்டி நால் ரோடு என்ற பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்தை முன்னாள் தமிழக தலைவர் EVKS இளங்கோவன் தொடங்கிவைத்து பேசினார்.
அப்போது அவர், மோடி இஸ்லாமிய மக்களுக்கு தொந்தரவு தர வேண்டும், அவர்களை தனிமை படுத்தி ஒதுக்க வேண்டும் என்று திட்டமிட்டே குடியுரிமை திருத்தச் சட்டத்தை கொண்டு வந்துள்ளார். இந்தியாவில் ஒற்றுமையாக இருக்கும் மக்களை மதத்தால் பிரிக்க வேண்டும் என மோடி திட்டமிட்டே செயல்படுகிறார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக பல மாநிலங்களில் உள்ள சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவந்துள்ளனர். ஆனால் தமிழக ஆட்சியாளர்கள் அடிமைகளாக இருக்கிறார்கள்.
இவர்கள் எப்போதுமே அடிமைகள் தான் முன்பு ஜெயலலிதாவுக்கு அடிமையாக இருந்தார்கள், இப்போது மோடிக்கு அடிமைகளாக இருக்கிறார்கள். மோடியை பகைத்துக் கொள்ள முடியாத இந்த அடிமைகள் தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவர முடியாது எனக்கூறிவிட்டனர்.
பிரிட்டிஷ்காரர்களையே விரட்டி, விரட்டி அடித்தவர்கள் நமது மக்கள். மோடி அரசையும் விரட்டி அடித்து தூக்கியெறிவார்கள். ஆயிரக்கணக்கான தலைவர்களும், தொண்டர்களும் உயிர் தியாகம் செய்து நாட்டிற்கு சுதந்திரத்தை பெற்றுக்கொடுத்தனர். ஆனால் இப்போது தனி மனிதனின் சுதந்திரமே பறிபோய்கொண்டிருக்கிறது.
மத்திய அரசு பொருளாதாரத்திலும் மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. படித்தவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை, வணிக நிறுவனங்கள் மூடப்படுவதால் வேலையிழப்பு அதிகமாகிறது. தொழில், வியாபாரம், விவசாயம் ஆகியவை மிக மோசமான நிலையில் போய் கொண்டிருக்கிறது.
கடுமையான நெருக்கடியில் இருக்கும் மக்கள் மீது கூடுதல் சுமையாக சமையல் எரிவாயு விலை உயர்வு உள்ளது. காங்கிரஸ் ஆட்சி காலத்தை ஒப்பிடுகையில் இப்போது இரண்டு மடங்கு விலை அதிகரித்துள்ளது. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் மோடி அரசுக்கு கடுகளவும் இல்லை. ஹிட்லர், முசோலினி போன்று மோடி செயல்படுகிறார். அந்த சர்வாதிகாரிகளுக்கு ஏற்பட்ட நிலைதான் மோடிக்கும் ஏற்படும்.
இந்த நிலை தொடருமானால் தமிழகத்துக்குள் மோடி கால் வைக்க முடியாத நிலைதான் உருவாகும். நமது இளைஞர்கள் உணர்ச்சி மிக்கவர்கள், தன்னெழுச்சியாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தை யாரும் மறந்துவிடாதீர்கள். நாடு மோசமான நிலையில் போய்க்கொண்டிருக்கிறது. இதை தடுத்து நிறுத்தியாக வேண்டும். எந்த தியாகத்தையும் செய்ய காங்கிரஸ் கட்சியினர் தயாராக இருக்க வேண்டும். என்றார்.