Skip to main content

தொகுதிப் பங்கீடு; திமுக - இந்திய கம்யூனிஸ்ட் இடையே பேச்சுவார்த்தை!

Published on 29/01/2024 | Edited on 29/01/2024
mp election seat allocation Talks between DMK and CPI

இந்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள திமுக, நாடாளுமன்றத் தேர்தலுக்கான பல்வேறு குழுக்களை உருவாக்கி அதற்கான அறிவிப்புகளைக் கொடுத்திருந்தது. அதன்படி கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திட நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில் அமைச்சர்கள் கே.என். நேரு, ஐ. பெரியசாமி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், நாடாளுமன்ற உறுப்பினர்களான திருச்சி சிவா, ஆ. ராசா மற்றும் பொன்முடி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்நிலையில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து திமுகவுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிப்ரவரி 3 ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. திமுக தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் இந்தப் பேச்சுவார்த்தையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொகுதி பங்கீட்டுக் குழுவில் இடம்பெற்றுள்ள எம்.பி. சுப்பராயன், முன்னாள் எம்.எல்.ஏ பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

முன்னதாக நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு குறித்து திமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள டி.ஆர். பாலு தலைமையிலான குழு தமிழக காங்கிரஸ் கமிட்டி தேர்தல் குழுவுடன் நேற்று (28.01.2024) மாலை 3 மணியளவில் பேச்சுவார்த்தை நடத்தியது. திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த  பேச்சு வார்த்தையில் திமுக குழுவினருடன் காங்கிரஸ் சார்பில் 5 பேர் கொண்ட குழுவினர் கலந்து கொண்டனர். இதன் மூலம் திமுக தனது கூட்டணிக் கட்சிகளில் முதற்கட்டமாக காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்