Skip to main content

“இந்த பதிலை சொல்ல திமுக அரசுக்கு அவமானமாக இருக்காதா?” - இ.பி.எஸ். கேள்வி!

Published on 18/03/2025 | Edited on 18/03/2025

 

Wouldnt it be embarrassing for the DMK govt to give this answer EPS Question

திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட காட்சி மண்டபம் அருகே இன்று (18.03.2025) காலை 5:30 மணியளவில் நடந்து சென்று கொண்டிருந்த 50 வயது மதிக்கத்தக்க ஒருவரை மர்ம நபர்கள் வெட்டி கொன்றுவிட்டுத் தப்பிச் சென்றனர். இது குறித்து உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர். அதில் படுகொலை செய்யப்பட்ட நபர் நெல்லை டவுன் பகுதியைச் சேர்ந்த ஜாகிர் உசேன் என்பதும், காவல்துறை அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்ற இவர் தமிழக முன்னாள் முதல்வர் கலைஞரின் தனிப்பிரிவு அதிகாரியாக இருந்தவர் என்பதும் தெரிய வந்தது.

இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் வக்பு வாரியத்திற்கு சொந்தமான 32 சென்ட் நிலம் தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருவதும் தெரிய வந்தது.மேலும் தன்னுடைய உயிருக்கு ஆபத்து உள்ளதாக ஜாகிர் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. ரம்ஜான் நோன்புக்காக இன்று வீட்டில் இருந்து கிளம்பி பள்ளிவாசலுக்கு சென்று தொழுகை முடித்துவிட்டு சென்றபோது மர்ம கும்பல் அவரை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது. ஓய்வுபெற்ற முன்னாள் காவல் ஆய்வாளர் ஜாகிர் உசேன் பிஜில் படுகொலை செய்யப்பட்டுள்ளது நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய அக்பர்ஷா, கார்த்திக் என்ற இருவர் திருநெல்வேலி மாவட்ட நான்காவது நீதிமன்றத்தில் ஆஜராகினர். அவர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த படுகொலை சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “திருநெல்வேலியில் அதிகாலை தொழுகை முடித்துவந்த ஓய்வுபெற்ற காவல் அதிகாரி ஜாஹீர் உசேன், மர்மநபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

அதே போல், நேற்று (17.03.2025) கோட்டூர்புரத்தில் ரவுடிகளுக்கு இடையிலான தகராறில் இரட்டைக் கொலை நடந்துள்ளதாக செய்திகள் வருகின்றன. திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கின் அவல நிலை குறித்து நான் விளக்க வேண்டிய அவசியமே இல்லை. ஊடகங்கள் மைக்கை நீட்டினால் மக்களே உரிய மரியாதையுடன் அதனை சொல்வார்கள். ரமலான் மாதத்தில் அதிகாலை தொழுகை முடித்து ஒரு ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி, அதுவும் கலைஞரின் தனிப்பிரிவு அதிகாரியாக பணியாற்றியவர், வீட்டிற்கு பாதுகாப்புடன் செல்ல முடியவில்லை. தன் உயிருக்கு ஆபத்து இருப்பது குறித்து அவரே ஒரு காணொளியை வெளியிட்டும் இருந்திருக்கிறார்.

Wouldnt it be embarrassing for the DMK govt to give this answer EPS Question

இதற்கெல்லாம் என்ன தான் பதில் வைத்திருக்கிறீர்கள்  முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களே? வழக்கம் போல உங்கள் அமைச்சர்களை விட்டு, ‘அது தனிப்பட்ட பிரச்சனை’ என்று கடந்துவிடப் பார்ப்பீர்கள். அவ்வளவு தானே?. இந்த பதிலை சொல்ல திமுக அரசுக்கு அவமானமாக இருக்காதா?. உங்கள் வழிக்கே வருகிறேன் - தனிப்பட்ட பிரச்சனை என்றாலும் கொலை செய்வதற்கான துணிச்சல் எங்கிருந்து வருகிறது?. உங்கள் ஆட்சியில் சட்டத்தின் மீதான அச்சம் துளி கூட இல்லாமல் போனதால் தானே? இதனை நீங்கள் எப்படி மறுப்பீர்கள்?. ‘கோட்டூர்புரத்தில் ரவுடிகள் இடையிலான தகராறில் நாங்கள் என்ன செய்ய முடியும்?’ என்று நீங்கள் நிச்சயம் கேட்கக் கூடும். ஏனெனில், பொறுப்பற்ற பதில்களை அளிப்பது மட்டும் தானே உங்கள் அரசு செய்து வருவது?.

ஆனால், அந்த கேள்வியைக் கேட்பதற்கு முன், ‘தமிழ்நாட்டில் தலைதூக்கும் ரவுடியிஸத்தைத் தடுக்கத் தவறியதற்கு யார் பொறுப்பு?’ என்று மக்கள் கேட்பார்கள் என்பதை நினைவிற்கொள்ளுங்கள். ஜாஹீர் உசேன் கொலையில் தொடர்புள்ள அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். தன் நேரடி கட்டுப்பாட்டில் சட்டம் ஒழுங்கு இருப்பதாக போட்டோஷூட் வசனம் பேசியதை நினைவிற்கொண்டு, அந்த இரும்புக்கரத்தின் துரு நீக்கி இனியேனும் செயல்படுத்த வேண்டுமென திமுக அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்