கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் முதலில் மூடப்பட்டிருந்தன. பின்னர் அரசு சில தளர்வுகளுடன் ஊரடங்கை அமல்படுத்தியது. அந்தத் தளர்வின்போது டாஸ்மாக் கடைகளைத் திறக்க உத்தரவிட்டது. டாஸ்மாக் கடைகளில் சில வழிமுறைகளுடன் விற்பனை நடக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியது.
இந்த நிலையில் டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் ராஜா, விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள வடதரம் டாஸ்மார்க் கடை மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
டாஸ்மார்க் கடைகளில் ஊழியர்களுக்கு சானிடைசர், முகக்கவசம், கையுறை போன்ற உபகரணங்கள் முதலில் வழங்கப்பட்டதாகவும், கடைகளில் மது வாங்க வருபவர்களுக்கு தடுப்பு ஏற்படுத்தி தீவிர பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கும் டாஸ்மாக் ஊழியர்கள், பின்னர் அந்த பாதுகாப்பு கைவிடப்பட்டன என்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எதுவும் இப்போது கடைப்பிடிக்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.
சானிடைசர், முகக்கவசம், கையுறை போன்ற உபகரணங்கள் வாங்குவதற்கான செலவுத்தொகைகளை டாஸ்மார்க் நிர்வாகம் ஊழியர்களுக்கு வழங்கவில்லை, கரோனா நோயினால் 2 ஊழியர்கள் அடுத்தடுத்து பலியான நிலையில் டாஸ்மாக் ஊழியர்கள் பெரும் அச்சத்தில் உள்ளதாக அரசு மீது குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் விழுப்புரம் கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சேர்ந்த 226 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு அதன் ஊழியர்கள் அனைவரும் விழுப்புரம் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகம் முன்பு திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதை அறிந்த மண்டல மேலாளர் முருகன் டாஸ்மார்க் ஊழியர்கள், நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது டாஸ்மாக் பணியாளர்கள் எங்களுக்குப் பணி பாதுகாப்பு வேண்டும், உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு அரசு அறிவித்த 50 லட்சம் நிவாரணம் அவர்களின் வாரிசுகளுக்குத் தகுதி அடிப்படையில் பணி வழங்க வேண்டும், நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதற்கான மருத்துவச் செலவுகளை நிர்வாகமே ஏற்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
இதைத் தொடர்ந்து உயிரிழந்த ஊழியர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். ஊழியர்கள் கோரிக்கைகளை அரசிடம் தெரிவிப்பதாக மாவட்ட மேலாளர் முருகன் கூறியதையடுத்து ஊழியர்கள் அனைவரும் கலைந்துசென்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் டாஸ்மாக் பணியாளர் சங்க கோபாலகிருஷ்ணன் பிரபாகரன் ஜெய்கணேஷ் விஜி தொ.மு.சவைச் சேர்ந்த காமராஜ் உட்பட பல ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.