நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிப்பு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக தமிழ்க முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்து வாக்குச் சேகரிக்க உள்ளார். அந்த வகையில் இன்று (22.03.2024) திருச்சி சிறுகனூரில் நடைபெற்ற பிரச்சார பொது கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது திருச்சி ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோவையும், பெரம்பலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் அருண் நேருவையும் ஆதரித்து வாக்கு சேகரித்து தனது பிரச்சாரத்தை தொடங்கினார்.
முன்னதாக இந்த பொதுக் கூட்டத்தில் பெரம்பலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு பேசுகையில், “லட்சக்கணக்கான தொண்டர்கள் உள்ள தி.மு.க.வில் என்னை வேட்பாளராக தேர்ந்தெடுத்த முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு மனமாந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். திருச்சியில் நடைபெற்ற மாநாடுகளை எல்லாம் ஓரமாக நின்று பார்த்திருக்கிறேன். பல்லாயிரக்கணக்கானவர்கள் கூடியிருக்கும் இந்த கூட்டத்தின் மேடையில் நானும் ஒரு நாள் மைக் முன்னாள் நிற்பேன் என நினைத்துக்கூட பார்க்கவில்லை. இளைஞர்கள் பல்வேறு பொறுப்புகளுக்கு வர வேண்டும் என்ற அடிப்படையில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கி இருக்கிறார்.
அதனைவிட முக்கியமாக தேர்தல் பரப்புரையை தொடங்கும் முதல்வர் மு.க. ஸ்டாலின் முதன் முதலாக எனக்கு வாக்கு கேட்பது என் வாழ்நாளில் மறக்க முடியாத பெருமையாக இருக்கிறது. முதல்வர் மு.க. ஸ்டாலின் என் மீது எத்தகைய நம்பிக்கையை வைத்திருக்கிறார்களோ அதனை என் வாழ்நாள் முழுவதும் காப்பாற்றுவேன் என பல்லாயிரக்கணக்கானவர்கள் கூடியிருக்கும் இந்த கூட்டத்தில் உறுதியளிக்கிறேன். கடந்த இரண்டரை ஆண்டுகளில் தமிழகம் பொற்கால ஆட்சியை கண்டிருக்கிறது. அதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் தான் காரணம். இந்தியாவே முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆட்சியை அண்ணாந்து பார்க்கிறது. இத்தகைய தலைவரால் அடையாளம் கட்டப்பட்ட வேட்பாளராக இங்கு பெருமையாக நிற்கிறேன். பெரம்பலூர் தொகுதிக்கு தேவையான திட்டங்களை மத்தியில் அமைய இருக்கும் இந்தியா கூட்டணி ஆட்சி மூலமாக பெற்று தருவேன். நான் உங்கள் வீட்டு பிள்ளையாக செயல்படுவேன்” எனத் தெரிவித்தார்.