தமிழகத்தில் 66 இடங்களில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு வெளியிட்டு இருக்கும் அறிவிப்பாணைக்கு எதிராக விவசாயிகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
தமிழக அரசு சார்பில் நேற்று, 'நிலக்கரி சுரங்கம் அமைக்கும் நிலத்தை லீசுக்கு எடுப்பதற்கான அனுமதியை மாநில அரசு கொடுத்தால் மட்டுமே உள்ளே சென்று சுரங்கம் தோண்டும் பணிகளைச் செய்ய முடியும். எனவே விவசாயிகள் யாரும் கவலை அடைய வேண்டாம்' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து செய்தியாளர்களைச் சந்தித்து தங்களது கருத்துக்களைத் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை நிகழ்ந்து வரும் நிலையில் பேரவையிலும் இது குறித்து விவாதம் நடத்த திமுக எம்.எல்.ஏ டி.ஆர்.பி.ராஜா கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீதான விவாதம் பேரவையில் நடைபெற்றது. அதில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் காமராஜ், அதேபோல் தமிழக வாழ்வுரிமைக் கட்சியை சேர்ந்த வேல்முருகன், காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை, மனிதநேய மக்கள் கட்சியைச் சேர்ந்த ஜவாஹிருல்லா, கொங்குநாடு தேசிய கட்சி ஈஸ்வரன் உள்ளிட்ட பல உறுப்பினர்கள் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசினர். அதனைத் தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு கோவை பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசனை நோக்கி உங்கள் அரசாங்கத்தின் மீது (மத்திய பாஜக அரசு) தான் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்கள். நீங்கள் பேச விரும்பினால் பேசலாம் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேரவையில் பேசிய வானதி சீனிவாசன், ''நீங்கள் கூறிய மாதிரி எங்கள் கவர்மெண்ட்டை எதிர்த்துத்தான் எல்லோரும் புகார் கொடுத்திருக்கிறார்கள். ஆனாலும் எல்லோரும் அரசாங்கத்தைத் திட்டியதால் எங்களுக்கு அதற்கு பதில் சொல்வதற்கு கொஞ்சம் நேரத்தை கொடுங்கள். நிச்சயமாக ஒரு மனிதனுக்கு சோறு வேண்டுமா கரண்ட் வேண்டுமா என்று கேட்டால் சோறு தான் முக்கியம். அதில் மாற்றுக் கருத்து இல்லை. குறிப்பாக தமிழகத்தில் டெல்டா பகுதி, விவசாய ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த பகுதி என்பது அனைவரும் அறிந்த விஷயம். அதே மாதிரி இதற்கு முன்பாக அதிமுக தலைமையிலான அரசு அந்தப் பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்திருக்கிறது.
ஆனால் ஒரு ஏலம் வருகின்ற பொழுது எந்த ஒரு அரசாங்கத்தினுடைய சட்டத்திற்கு கீழாக மத்திய அரசாங்கமாகவே இருந்தாலும் நிலம் என்று வரும்போது உள்ளூரில் இருக்கின்ற வருவாய்த்துறை அனுமதி எல்லாம் தெரிவித்ததற்கு பிறகுதான் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த மாதிரி நடவடிக்கைகள் வரும் பொழுது வருவாய்த்துறை மற்றும் அந்த மாவட்டத்தினுடைய நிர்வாகம் இது தொடர்பாக என்ன விதமான நடவடிக்கைகளை எடுத்தார்கள்? ஏன் மத்திய அரசுக்கு முன்னதாகவே தகவல் சொல்லவில்லை.
நிறைய பேர் பேசும்போது கார்ப்பரேட்டுக்கு கொடுத்து விடுவார்கள். அம்பானி, அதானி என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார்கள். 2011ல் ஜனவரி 4 ஆம் தேதி இன்றைய முதல்வர் அன்றைய துணை முதல்வராக இருந்த பொழுது 100 கோடி ரூபாய் முதலீட்டில் கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் லிமிடெட்டோடு ஒரு ஒப்பந்தத்தை போட்டு 1,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும், 3,600 கோடி ரூபாய்க்கு வணிகரீதியான பலன் கிடைக்கும் சொல்லி அறிக்கை விட்டிருக்கிறார். அந்த அறிக்கை இன்றும் இருக்கிறது. நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கான ஏல அறிவிப்பிலிருந்து விலக்கு கொடுக்க வேண்டும் என பாஜக சார்பில் நாங்கள் நிலக்கரித் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதி இருக்கிறோம். அதை வலியுறுத்தவும் செய்வோம்'' என்றார்.