மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக சீத்தாராம் யெச்சூரி மீண்டும் தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22ஆவது தேசிய மாநாடு, ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 18ஆம் தேதி தொடங்கிய இந்த மாநாட்டின் கடைசி நாளான இன்று, 95 உறுப்பினர்களைக் கொண்ட மத்தியக்குழு தேர்வு செய்யப்பட்டது. அதில் ஜி.ராமகிருஷ்ணன், சி.பி.எம். பொதுச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோரும் தேர்வு செய்யப்பட்டனர்.
சி.பி.எம். கட்சியின் விதிமுறைகள் படி ஒருவர் மூன்று முறை பொதுச்செயலாளராக நீடிக்கலாம் என்பதால், சீத்தாராம் யெச்சூரி மீண்டும் தேசிய பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு முன்னர் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 21ஆவது மாநாட்டில், சீத்தாராம் யெச்சூரி பொதுச்செயலாளராக பதவியேற்றது குறிப்பிடத்தக்கது.
சி.பி.எம். கட்சியின் ஆதரவு நிறைந்த மேற்கு வங்கம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்பட்ட தோல்விகள் சீத்தாராம் யெச்சூரின் முன்னால் இருக்கும் சவால்களில் ஒன்றாகும். அதேசமயம், காங்கிரஸுடன் கூட்டணி வைக்கக்கூடாது என்ற பிரகாஷ் காரத்தின் கருத்துக்கு சீத்தாராம் யெச்சூரி எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.