Skip to main content

“பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும்” - எடப்பாடி பழனிசாமி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Edappadi Palaniswami said Safe travel of passengers should be ensured

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் நோக்கி ஒரு அரசு டவுன் பேருந்து புறப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்தப் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு கலையரங்கம் தாண்டி வளைவில் திரும்பியது. அப்போது எதிர்பாராத விதமாக அந்தப் பேருந்தின் நடத்துநரின் இருக்கை கழன்று, அதில் அமர்ந்திருந்த நடத்துநர் பஸ்சுக்கு வெளியே தூக்கி வீசப்பட்டார்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்து பயணிகள் கூச்சலிட உடனே டிரைவர் பேருந்தை நிறுத்தினார். பின்னர் காயத்துடன் கிடந்த நடத்துநரை மீட்டு அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்தப் பேருந்தில் வந்த பயணிகளை பின்னால் வந்த வேறொரு பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர். ஓடும்பேருந்தில் இருக்கை கழன்று நடத்துநர் வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில், பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “நேற்று திருச்சி நகரப் பேருந்து சென்று கொண்டிருக்கையில் ஒரு வளைவில் நடத்துநர் இருக்கையுடன் தூக்கி வெளியே விழுந்த சம்பவம் தமிழக மக்களிடம், குறிப்பாக அரசுப் பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே, ஒரு சில மாதங்களுக்கு முன்பு சென்னை மாநகரப் பேருந்தில் பயணம் செய்த பெண் பயணி ஒருவர் கீழே விழுந்து விபத்துக்குள்ளான நிகழ்வின்போதே இனியாவது அரசு பேருந்துகளை உரிய முறையில் பராமரிப்பு செய்து, அரசு பேருந்துகளில் பயணம் செய்பவர்களுக்கு பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்த நான் இந்த தி.மு.க அரசை வலியுறுத்தியிருந்தேன். ஆனால், மீண்டும் மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் பொதுமக்களிடம் அரசு பேருந்து பற்றிய நம்பிக்கையை கேள்விக்குறியாக்கியுள்ளன.

எனவே, இனியாவது இந்தத் திமுக அரசு விழித்துக் கொண்டு, அரசு பேருந்துகளின் ஆயுட்காலத்தை முன்பிருந்தது போல் குறைத்து புதிய பேருந்துகள் வாங்கவும், இயங்கிக் கொண்டிருக்கும் பேருந்துகளை முறையாக பராமரிப்பு செய்து, பொதுமக்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யுமாறும் வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

35 பலி எண்ணிக்கை; கள்ளக்குறிச்சி விரையும் எடப்பாடி பழனிசாமி

Published on 20/06/2024 | Edited on 20/06/2024
Edappadi Palaniswami is going to Kallakurichi for fake liquor issue

கள்ளக்குறிச்சி நகரப் பகுதியான ஏழாவது வார்டில் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்வது தொடர்ந்து வருவதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. இந்நிலையில் நேற்று அப்பகுதியில் கள்ளச்சாராயம் விற்கப்பட்டதாகவும், இதனைப் பலர் வாங்கி குடித்ததாகவும் கூறப்படுகிறது. முதலில் 4 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது உயிரிழப்பு 35 ஆக உயர்ந்துள்ளது.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்டோர்  ஜிப்மர் மருத்துவமனை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் என பல்வேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழப்புக்கு பாக்கெட் கள்ளச்சாராயம் காரணமாக இருக்கலாம் எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் இறந்தவர்களின் உடல்கள் உடற்கூராய்வு செய்யப்பட்ட பிறகே முழுமையான காரணம் தெரிய வரும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதேநேரம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டு புதிய ஆட்சியராக எம்.எஸ்.பிரசாந்த் நியமனம்  செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கள்ளச்சாராயம் குடித்து 30க்கும் மேற்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது.

இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக கள்ளக்குறிச்சி செல்லவிருப்பதாக அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தோர் எண்ணிக்கை 29ஆக உயர்ந்துள்ள செய்தி கேட்டு பேரதிர்ச்சி அடைந்தேன். இன்று தமிழ்நாடு சட்டப்பேரவை கூடும் நிலையில், மரபுப்படி மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் உட்பட பலருக்கு இரங்கல் தீர்மானம் வாசித்து நிறைவேற்றப்படும். மறைந்தோர்க்கு அ.தி.மு.க சார்பில் இரங்கலைப் பதிவுசெய்கிறேன்.

ஆனால், இச்சூழலில், திமுக அரசின் ஒட்டுமொத்த நிர்வாகத் தோல்வியாலும், மெத்தனப் போக்காலும் பரிதாபமாக உயிரிழந்தோரின் குடும்பத்தாரை நேரில் சந்தித்து அவர்களின் சொல்லொண்ணா துயரில் பங்குகொள்வதே பிரதானமாக அமைகிறது. மேலும் இறப்புக்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இறந்தவர்கள் குடும்பத்திற்கு என் ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்வதுடன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் குணமடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தோர் குடும்பத்தாரையும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரையும் சந்திக்க தற்போது கள்ளக்குறிச்சி விரைகிறேன்’ எனப் பதிவிட்டுள்ளார். 

Next Story

'இத்தனை நாட்கள் கட்சியைக் காப்பாற்றியது யாரு?' - சசிகலாவுக்கு எடப்பாடி கேள்வி

Published on 19/06/2024 | Edited on 19/06/2024
 'Who has saved the party for so many days?'- Sasikala asked the question

இத்தனை நாட்கள் அதிமுகவை காப்பாற்றியது யார் என எடப்பாடி பழனிசாமி கேள்வியெழுப்பியுள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ''இயற்கை சீற்றத்தால் விவசாயிகள் பாதிக்கப்பட்டபோது, விவசாயிகளின் பயிர்கள் பாதிக்கப்பட்ட போது காப்பீட்டு திட்டத்தின் மூலமாக இந்தியாவிலேயே அதிக காப்பீடு இழப்பீடு பெற்றுத் தந்த அரசு அதிமுக அரசு. விவசாயிகளின் நலன்கருதி பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்த ஏரி குளங்களை தூர்வாரச் செய்து மழைக்காலத்தில் நீர் சேகரித்து வைக்கப்பட்டது. கோடைகாலத்தில் விவசாயிகள் நிலத்திற்கு அந்த தண்ணீரை பயன்படுத்தினார்கள். குடிநீர் பஞ்சமும் இல்லாமல் இருந்தது.

அதோடு மேட்டூரில் இருந்து திறக்கப்படுகின்ற நீர் கடைக்கோடியில் இருக்கும் விவசாயிகளுக்கும் தங்குதடை இல்லாமல் செல்ல வேண்டும் என்பதற்காக அனைத்து கால்வாய்களும் தூர்வாரப்பட்டது. இப்படி பல திட்டங்களை விவசாயிகளுக்காக அதிமுக அரசு செய்தது. ஆனால் இப்பொழுது திமுக அரசு குறுவை சாகுபடி விவசாயிகளுக்கு இழப்பீடு தரவில்லை. 78.67 கோடி ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தார்கள். ஆனால் அதில் 24.50 கோடி தொகை மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு திட்டத்திற்கு ஒதுக்கி இருக்கிறார்கள். இது இரண்டையும் சேர்த்துதான் 78.67 கோடி ரூபாய். அதை வைத்து பார்த்தால் குறுவை தொகுப்புக்கு 54.17 கோடி ரூபாய் விவசாயிகளுக்கு கிடைக்கும். இது போதாது. ஏனென்றால் குறுவை சாகுபடிக்கும் முழுமையாக தண்ணீர் கிடைக்கவில்லை.

இன்றைய தினம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி சம்பவ இடத்திலேயே மூன்று பேர் இறந்ததாகவும் செய்தி ஊடகத்தில் வந்திருக்கிறது. இன்னும் சில பேர் பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அபாய கட்டத்தில் சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் வருகிறது. கிட்டத்தட்ட 40 பேர் கள்ளச்சாராயம் அருந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாக தகவல் வருகிறது. திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்து தொடர்ந்து கள்ளச்சாராய சாவுகள் நடந்த வண்ணம் இருக்கிறது. சட்டமன்றத்திலும் பலமுறை சொல்லியிருக்கிறேன் போதைப் பொருள் புழக்கத்தைத் தடுக்க வேண்டும்; கள்ளச்சாராயத்தை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று, ஆனால் இன்றைய தினம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அப்பாவி மக்கள், ஏழை மக்கள் கள்ளச்சாராயம் அருந்தி விலை மதிக்க முடியாத உயிரை இழந்து இருக்கிறார்கள்'' என்றார்.

அதனைத் தொடர்ந்து 'சசிகலா மீண்டும் அரசியலில் ரீஎன்ட்ரி கொடுத்திருப்பதாகக் கூறியுள்ளார். அதிமுகவை காப்பாற்றப் போகிறேன் என்று சொல்கிறாரே' என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு, ''இத்தனை நாள் அதிமுகவை யார் காப்பாற்றிக் கொண்டிருந்தார். இப்பதான் காப்பாற்ற வந்திருக்கிறார்களா? இது என்ன வேலையா  ரீஎன்ட்ரி கொடுக்க. ஒரு வேலைக்கு சென்று விட்டு மூன்று வருஷம் நின்று விட்டு மறுபடியும் வேலைக்கு சேர்வதா ரீஎன்ட்ரி. 2021-ல் என்ன சொன்னார்கள் நான் பொதுவாழ்க்கையில் இருந்து விலகி விட்டேன் என்று சொன்னார்கள். இப்பொழுது ரீ என்ட்ரி  என்கிறார்கள். இத்தனை நாட்கள் கட்சியைக் காப்பாற்றியது யாரு? தொண்டன்'' என்றார்.