இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.
அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.