Skip to main content

கணவருக்கு தவறான சிகிச்சை; மனைவி பரபரப்பு புகார்!

Published on 30/04/2024 | Edited on 30/04/2024
wife complained to the collector that her husband had been ill-treated

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஈக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் கந்தன்குமார். இவரது மனைவி சாவித்திரி. இந்தத் தம்பதியினருக்கு  2 மகன்கள் உள்ளனர். அதில் மூத்த மகனுக்கு மனவளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வயிற்று வலி காரணமாக சென்ற தனது கணவருக்கு தவறான மருத்துவ சிகிச்சை அளித்ததாகக் கூறி சாவித்திரி தனது மகனுடன் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிரபு சங்கரை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.

அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சாவித்திரி, “எனது கணவர் கந்தன்குமார் கூலி வேலை செய்வதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் மனநலம் குன்றிய நவீன் குமாருக்கு தேவையான சிகிச்சை அளித்து தனது குடும்பத்தைக் காத்து வந்த நிலையில் கந்தன்குமாருக்கு ஏற்பட்ட தீராத வயிற்றுவலின் காரணமாக கடந்த மார்ச் மாதம் 10ஆம் தேதி திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தோம், மேலும் கணவர் கந்தன்குமாருக்கு மார்ச் மாதம் 23ஆம் தேதி வயிற்றில் அறுவை சிகிச்சை செய்வதாக கூறி முதுகு தண்டுவடத்தில் மயக்க ஊசி செலுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து முதுகில் செலுத்தப்பட்ட மயக்க ஊசியில் இருந்த நீடில் சுமார் 8 சென்டிமீட்டர் அளவில் முதுகிலேயே இருந்து விட்டதாகவும் உடனடியாக மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்காவிட்டால் உயிருக்கு ஆபத்தாகிவிடும் என்று கூறியதால் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கணவரை மேல் சிகிச்சைக்காக அனுமதித்து முதுகு தண்டுவடத்தில் இருந்த 8 சென்டிமீட்டர் நீடிலை அகற்றினர். இதனால் எனது கணவர் கந்தன்குமாரின் உடலில் இடுப்புக்கு கீழே உள்ள எந்த உடல் உறுப்பும் வேலை செய்யாமல் செயல் இழந்து விட்டது

இதனால் எனது கணவரின் வயிற்று வலிக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் மருத்துவர்களின் அலட்சியப் போக்கினால் முதுகில் தவறான அறுவை சிகிச்சை மேற்கொண்டு எனது கணவரின் உடல் உறுப்புக்கள் செயல் இழக்க காரணமாக இருந்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தினந்தோறும் கணவரின் கூலியை நம்பி குடும்பத்தை நடத்தி வந்த நாங்கள் தற்பொழுது கையேந்தும் நிலைமைக்கு சென்று விட்டதால் உரிய இழப்பீடு வழங்க வேண்டும்” எனக்  கண்ணீருடன் பேட்டி அளித்தார்.

பாதிக்கப்பட்ட கந்தன்குமாரின் இளைய மகன் புவனேஷ் கூறுகையில், என்னுடைய அப்பாவிற்கு வயிற்று வலி என மருத்துவமனையில் சேர்த்தோம். ஆனால் இப்ப தப்பான சிகிச்சை அளித்து எங்க அப்பா நடக்க முடியாமல் இருக்கார் அவரை எப்படியாவது நடக்க வைக்கணும். எங்க அப்பா பழைய மாதிரி எனக்கு வேணும்” என்று கண்ணீருடன் கூறினார்.

மேலும் பாதிக்கப்பட்ட கந்தன் குமாரின் மனைவி சாவித்திரி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிரபுசங்கரை சந்தித்து மனு அளித்துள்ளதாகவும் அவர் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்ததாகவும் தெரிவித்தார்.

சார்ந்த செய்திகள்