தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக கடந்த டிசம்பர் மாதம் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.
அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு இதுவரை நிதி வழங்காமல் இருந்தது.
இந்த நிலையில், தமிழகத்தில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிவாரண நிதியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது’ எனத் தெரிவித்துள்ளது.
மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், அதிக வெப்பம் காரணமாக அதிமுக சார்பில் மாவட்டந்தோறும் பல இடங்களில் நீர் மோர் பந்தலை வைக்குமாறு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிமுகவினருக்கு கோரிக்கை விடுத்திருந்தார். அந்த வகையில், சேலம் மாவட்டத்தில் அதிமுக சார்பில் 4 இடங்களில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதனை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்து செய்தியாளர்களைச் சந்தித்துp பேசினார்.
அப்போது அவர், “தமிழ்நாடு அரசு கேட்ட நிதியை மத்திய அரசு தரவில்லை. அதிமுக ஆட்சியிலும் மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை. எப்போதும் கேட்கப்படும் நிதியை விட குறைந்த அளவு நிதியையே மத்திய அரசு அளிக்கும். மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆண்ட போதிலும் நிதியைக் குறைத்து தான் வழங்கினார்கள். திமுக மத்தியில் அதிகாரத்தில் இருந்தபோதே கூட கேட்ட நிவாரணம் கிடைக்கவில்லை. குடிமராமத்து திட்டம் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டது. அதிமுக ஆட்சியில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டிலிருந்த 14 ஆயிரம் ஏரிகளில் 6,000 தூர்வாரப்பட்டன. தமிழகத்தில் போதைப்பொருளால் சமுதாயம் மிக மோசமான அழிவுக்குச் சென்று கொண்டிருக்கிறது ” எனத் தெரிவித்துள்ளார்.