கிராமபுற மாணவர்களை தகுதி மற்றும் தரம் என்கிற பெயரால் அப்புறப்படுத்துவது தான் பா.ஜ.க.வின் புதிய கல்வி கொள்கை என்கிறார் விடுதலை சிறுத்தை கட்சி பொதுச் செயலாளர் சிந்தனைச்செல்வன்.
விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் தேசிய சனாதன கல்விக் கொள்கை எதிர்ப்பு கண்டன பொதுக் கூட்டம் கும்பகோணத்தில் நடைப்பெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளாராக விசிகவின் மாநில பொதுச் செயலளார் சிந்தனை செல்வன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது பேசிய அவர், "ஜனநாயக நடைமுறை மூலம் தான் பா.ஜ.க ஆட்சியை கைப்பற்றியுள்ளது. மத்திய அரசை போர் செய்தோ அல்லது படையெடுத்தோ அவர்கள் கைப்பற்றவில்லை. மாறாக ஜனநாயக முறைப்படி வீதியில் இறங்கி மக்களை சந்தித்து கைப்பற்றி உள்ளனர். ஜனநாயக ரீதியாக வென்ற பா.ஜ.க அரசை சர்வாதிகாரிகள் என்று எப்படி சொல்ல முடியும்
இதே அடிப்படையில், ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டவர் தான் ஹிட்லர். அதன் பின்பு, ஹிட்லர் சர்வாதிகாரத்தினால் உலக அழிவை ஏற்படுத்தியதை அனைவரும் அறிவர். தற்போது நாட்டில் சர்வாதிகார போக்குடன் வெறுப்பு பிரச்சாரத்தை செய்து வருகின்றனர்.
பணமதிப்பு இழப்பு நடவடிக்கை என்பது சொந்த மக்கள் மீதே நடத்தி இருக்கின்ற தாக்குதல். இது மக்களின் சேமிப்பின் மீதும், பொருளாதாரத்தின் மீதுமான கொடூரமான கொள்ளை தாக்குதல் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். புதிய கல்விக் கொள்கை என்பது உழைக்கும் மக்களுக்கு எதிரான பா.ஜ.க.வின் கல்வி கொள்கையாக இருக்கிறது. இதை அனைவரும் எதிர்க்கவேண்டும். முன்பு இந்தியாவில் உருவாக்கப்பட்ட கல்விக் கொள்கை அனைத்தும் உயர்ந்த நோக்கத்தோடு எடுக்கப்பட்ட கல்வி கொள்கையாகும்
ஏழை எளிய மக்கள்,பழங்குடியினர் படிப்பறிவு இல்லாதவர்கள் அனைவருக்கும் கல்வி என்பது அரசின் கடமை என்ற கொள்கை முடிவோடு உயிரோட்டமாக இருந்தது.அரசுக்கும் மக்களுக்கும் இருக்கிற உறவு தாய்க்கும் மகனுக்கும் இருக்கிற உறவாக இருக்க வேண்டும். தற்போது பாஜகவின் கல்விக்கொள்கையில் மாற்றம் நிகழ்ந்துள்ளது. தகுதி மற்றும் தரம் என்ற பெயரால் கிராமபுற மாணவர்களை அப்புறப்படுத்துவதும், கல்வியில் உனக்கு தகுதி இல்லை என்று அப்புறப்படுத்துவதும் தான் புதிய கல்வி கொள்கையின் திட்டமாகும். கிராமப்புற மாணவியான அனிதாவின் தற்கொலைக்கு காரணமான கல்வி கொள்கைதான் பாஜகவின் கல்வி கொள்கை" என பேசினார்.