அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், வரும் ஜூலை 11ஆம் தேதி சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் ஒருபுறம் தீவிரமாக நடந்து கொண்டிருக்க, பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டுமென ஓ.பன்னீர்செல்வம் தரப்பு சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தில் தனித்தனியே மனுத்தாக்கல் செய்துள்ளது.
அதோடு, பொதுக்குழுவில் 23 தீர்மானங்களை மட்டுமே நிறைவேற்ற வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தீர்ப்பு ஜூன் 23ஆம் தேதி நடந்த கூட்டத்தில் மீறப்பட்டதாக ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளர் சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வர இருந்த நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு இடைக்காலத்தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜூன் 23ஆம் தேதி நடந்த பொதுக்குழுவில் 23 தீர்மானங்களை மட்டுமே நிறைவேற்ற வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையின்போது இந்த உத்தரவானது பிறப்பிக்கப்பட்டது.
உட்கட்சி விவகாரத்தில் நாங்கள் தலையிட முடியாது எனக் கூறி ஜூலை 11ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க மறுத்தது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு இடைக்காலத்தடை என உச்ச நீதிமன்றத்தின் அடுத்தடுத்த இரண்டு உத்தரவுகள், ஓபிஎஸ் தரப்பிற்கு ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.