தற்போது இருக்கும் மா.செ.க்களிடம் ஏற்கனவே எடப்பாடி, வேலுமணி தரப்பு ஏரி மராமத்துப் பணிகளின் அடிப்படையில் ஏகத்துக்கும் வசூல் செய்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் சிறிய மாவட்டங்களை இரண்டாகவும், பெரிய மாவட்டங்களை மூன்றாகவும் பிரித்து புதிய மா.செ. பதவிகளில் தங்கள் ஆட்களைச் சரிக்குச் சரியாக அமர்த்துவது என்று அவர்கள் இருவரும் முடிவெடுத்திருக்கிறார்களாம். குறிப்பாக, விருதுநகர் மாவட்டத்தைப் பிரித்து, அதில் ஒன்றுக்கு அமைச்சர் மா.ஃபா. பாண்டியராஜனை மா.செ.வாக்கலாம் என்று ஓ.பி.எஸ்.சிடம் எடப்பாடி பழனிசாமி கூறியதாகச் சொல்கின்றனர்.
மேலும் ராஜேந்திர பாலாஜியை ஓரங்கட்டி மாஃபாவுக்கு முக்கியத்துவம் கொடுப்பதன் பின்னணி என்ன என்று விசாரித்த போது, பல காரணங்கள் இருப்பதாகக் கூறுகின்றனர் ர.ர.க்கள். அத்துடன், பொதுவாகவே தென்மாவட்டங்களில் நாடார் சமூகத்திற்கு எடப்பாடி அரசு முக்கியத்துவம் தராமல் ஒதுக்குகிறது என்ற விமர்சனம் கடுமையாக இருக்கிறது. தமிழ்நாடு நாடார் மகாஜன சங்கப் பொதுச் செயலாளரான சதீஷ் மோகன், எடப்பாடித் தரப்பு, எப்படியெல்லாம் தங்கள் சமூகத்தை ஓரங்கட்டுகிறது என்று அவர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து போர்க்கொடி தூக்கியிருக்கிறார். அதேபோல் தங்கள் சமூக உட்பிரிவினர்களை ஒன்றிணைக்கும் பணியிலும் அவர் இறங்கியிருப்பதாகச் சொல்கின்றனர்.
இதையறிந்த எடப்பாடி, அந்தத் தரப்பைக் குளிரவைக்க, அவர்களின் சமூககத்தைச் சார்ந்த அமைச்சரான மா.ஃபாவுக்கு மா.செ. பதவியோடு கூடுதல் இலாகாவையும் ஒதுக்கலாம் என்று முடிவெடுத்திருக்கிறாராம். ஊராட்சி செயலாளர்கள் பதவிகள் கலைக்கப்பட்டுள்ள நிலையில், 10 ஊராட்சிக்கு ஒரு ஒன்றியச் செயலாளர், பெரிய மாவட்டங்களை மூன்றாகப் பிரித்து தனித்தனி மா.செ.க்கள் என்று எடப்பாடி ப்ளான் போட்டு வருவதாகச் சொல்கின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள்.