
நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.
அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.
இதற்கிடையே தேர்தல் சின்னம் தொடர்பான குழப்பம் நாம் தமிழர் கட்சிக்கு ஏற்பட்டது. அதாவது கடந்த தேர்தல்களில் நாம் தமிழர் கட்சிக்கு கொடுக்கப்பட்டிருந்த ‘கரும்பு விவசாயி’ சின்னம் இந்த தேர்தலில் கர்நாடகாவைச் சேர்ந்த பாரதிய பிரஜா ஐக்கிய கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. முதலில் வருபவருக்கே சின்னம் என்ற அடிப்படையில் கரும்பு விவசாயி சின்னம் அக்கட்சிக்கு வழங்கப்பட்டதாகக் தேர்தல் ஆணையத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதே சமயம் நாம் தமிழர் கட்சிக்கு ‘மைக்’ சின்னம் வழங்கப்பட்டது.

இத்தகைய சூழலில் திருவள்ளுர் நாடாளுமன்ற தொகுதிக்கு பாரதிய பிரஜா ஐக்கிய கட்சி சார்பில் கந்தன் என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் பாரதிய பிரஜா ஐக்கிய கட்சி சார்பில் திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதிக்கு வேட்புமனு தாக்கல் செய்த கந்தனின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. அவர் தாக்கல் செய்திருந்த வேட்பு மனுவில் சுயேட்சை என்றும் சில இடங்களில் பாரதிய பிரஜா ஐக்கிய கட்சி என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனை நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஜெகதீஷ் சந்தர் சுட்டிக்காட்டி கந்தனின் வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதனை ஏற்றுக்கொண்ட திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான பிரபு சங்கர் கரும்பு விவசாயி சின்னம் பெற்ற கட்சியின் வேட்பாளர் கந்தனின் வேட்பு மனுவை நிராகரித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.