இலங்கையில் இறுதிப் போரின்போது தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட போர்க் குற்றங்கள் குறித்த விசாரணையை நடத்தி, அதன் உண்மைகளை ஆவணப்படுத்தும் தீர்மானம் ஐ.நா.மனித உரிமைகள் அவையில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
ஐ.நா. மனித உரிமைகள் அவையின் 46வது கூட்டத்தில், இது தொடர்பான தீர்மானம் முன்மொழியப்பட்டது. அதனை ஆதரித்து இங்கிலாந்து, இத்தாலி, ஹாலந்த், பிரான்ஸ் உள்ளிட்ட 22 நாடுகள் வாக்களித்தன. சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட 11 நாடுகள் இதனை எதிர்த்தன. இந்தியா உள்ளிட்ட 14 நாடுகள், வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்துவிட்டன.
ஈழத் தமிழர்களுக்கான நீதி விசாரணைக்கு உதவும் முதல்படியாக இருக்கும் அந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை ஆதரித்து இந்தியா வாக்களித்திருக்க வேண்டும் என்கிற விமர்சனங்கள் சர்வதேச அளவில் எதிரொலித்து வரும் நிலையில், இந்தியாவின் நிலைப்பாடு பற்றி காட்டமாக ட்வீட் செய்திருக்கிறார் காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம்.
இதுகுறித்து அவர், “ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்காமல் இந்தியா விலகிக்கொண்டிருக்கிறது. இது, தமிழர்களின் விருப்பம் மற்றும் உணர்வுகளுக்கு செய்துள்ள துரோகம். தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிராக செயல்படும் அதிமுக - பாஜக கூட்டணியை தேர்தலில் மக்கள் தண்டிக்க வேண்டும். தமிழர்களின் நலன்களுக்கு எதிராக செயல்பட்ட வெளியுறவுத்துறை அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்” என்று கோபமாக தெரிவித்திருக்கிறார்.