ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தில் இருக்கும் சட்டப்பிரச்சனைகளை புரிந்து கொள்ளாமல் திமுக தொடர்ந்து ஆளுநரை குற்றம் சாட்டுவதாக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று காலை 10.30 அளவில் சந்தித்தார். மத்திய அரசின் திட்டங்கள் கிராமங்களுக்கு சரியாக சென்று சேரவில்லை என்றும், தமிழகத்தில் வெடிபொருட்களை கண்டுபிடிக்கும் கருவிகள் சோதனைக்கு உத்தரவு வழங்க வேண்டியும் ஆளுநரை சந்தித்தார்.
இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “மாநில அரசு அனைத்து பழியையும் ஆளுநர் மேல் போட்டு தப்பிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆக்கப்பூர்வமான முறையில் ஆளுநரின் கேள்விகளை சரிசெய்து சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளை அடைத்து செயல்பட வேண்டும். இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் ஆன்லைன் சூதாட்டத்திற்கு மிகக் கடுமையான நிர்வாக ரீதியிலான நடவடிக்கைகளை கொண்டு வந்துள்ளனர்.
தமிழகத்தில் எத்தனையோ பேர் ப்ராக்ஸி சர்வர் வைத்து அதை உபயோகிக்கிறார்கள். இது போல் பல சட்டப்பிரச்சனைகள் இருக்கிறது. இதற்குத்தான் ஆளுநர் நேரம் எடுத்துக்கொள்கிறார். ஆனால், இது புரியாமல் திமுக தொடர்ந்து ஆளுநரை இவ்வாறு பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாது” எனக் கூறினார்.