Skip to main content

முண்டியடித்து காய்கறி வாங்கிச் சென்றுள்ளனர்... வீட்டில் அடங்கி இருங்க... பாமக நிறுவனர் ராமதாஸ் அதிரடி!

Published on 02/05/2020 | Edited on 02/05/2020


 

pmk


இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கை மே 17 ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அறிவிப்பு வெளியிட்டது. மாவட்டங்கள் வாரியாகச் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என மூன்று வகையான மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, இந்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் இதுவரை இல்லாத அளவு அதிகபட்சமாக 2,293 பேர் கரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். அதேபோல கடந்த 24 மணி நேரத்தில் 71 பேர் கரோனாவால் பலியாகி உள்ளனர். 1,061 பேர் குணமடைந்துள்ளனர். மாநிலவாரியாகப் பார்க்கும்போது, அதிகபட்சமாக மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் இதுவரை 11,506 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதில் 1,879 பேர் குணமடைந்த நிலையில் 485 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கரோனா வைரஸ் பரவல் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், "கோயம்பேடு சந்தையில் ஆயிரக்கணக்கான கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில், அங்குப் பணியாற்றி வந்த பல்லாயிரக்கணக்கானோர் சொந்த ஊர் திரும்பியுள்ளனர். அவர்கள் மூலம் நோய்ப் பரவக் கூடும் என்பதால், கோயம்பேடு சென்று வந்தவர்களுக்கு கரோனா ஆய்வு நடத்தப்பட வேண்டும். சென்னையில் கடந்த சில நாட்களில் மட்டும் பல லட்சக்கணக்கான மக்கள் கோயம்பேடு சந்தைக்குச் சென்று, சமூக இடைவெளி இல்லாமல் முண்டியடித்து காய்கறி வாங்கிச் சென்றுள்ளனர். அவர்களில் பலருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்பதால், அவர்களைத் தேடி கரோனா ஆய்வு செய்ய வேண்டும். சென்னை கோயம்பேடு சந்தை புதிய கரோனா பரவல் மையமாக உருவெடுத்துள்ளது. 

கோயம்பேட்டில் பணியாற்றி கடலூர் மாவட்டத்திற்குத் திரும்பிய 7 பேருக்கும், அரியலூர் மாவட்டத்திற்குத் திரும்பிய 19 பேருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாக வெளியாகி உள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. சென்னை மாநகர மக்கள் மிக மிகக் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ளாவிட்டால் நான்காம் கட்டமாகவும் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதைத் தவிர்க்க முடியாது. சென்னை மக்கள் சுதந்திரத்தை அனுபவிக்க வேண்டும் என்றால் அடுத்த 15 நாட்களுக்கு உங்களை நீங்களே வீடுகளில் அடைத்துக் கொள்ள வேண்டும். சென்னையில் சில ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பதால், நோய்ப்பரவும் ஆபத்து அதிகரித்துள்ளது. இத்தகைய சூழலில் பொதுமக்கள் ஏற்கனவே இருந்ததை விட பல மடங்கு கூடுதல் கட்டுப்பாட்டுடன் வீடு அடங்கி இருக்க வேண்டும்; அரசும் பல மடங்கு கடுமையாக ஊரடங்கைச் செயல்படுத்த வேண்டும்" என்றும் குறிப்பிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்