அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாக்களைத் தொடர்ந்து பெரும்பான்மை பலத்தை இழந்திருக்கிறார் புதுவை முதல்வர் நாராயணசாமி. பெரும்பான்மையை நிரூபிக்க நாராயணசாமிக்கு உத்தரவிட வேண்டும் என புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பு ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனிடம், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் ரெங்கசாமி தலைமையில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து சட்ட ஆலோசனைகளைப் பெற்றார் தமிழிசை. அதன் தொடர்ச்சியாக தமிழிசையின் அழைப்பின் பேரில், ஆளுநர் மாளிகைக்கு முதல்வர் நாராயணசாமி நேற்று (18.02.2021) சென்றார். அவரிடம், எதிர்க்கட்சிகளின் புகார்களைத் தெரிவித்ததுடன், ’’உங்கள் தலைமையிலான ஆட்சிக்குப் பெரும்பான்மை இருப்பதை 22-ம் தேதி சட்டப்பேரவையில் நிரூபியுங்கள்’’ என உத்தரவிட்டிருக்கிறார்.
அதற்கேற்ப, சட்டப்பேரவையைக் கூட்டவும் ஆணை பிறப்பித்திருக்கிறார் தமிழிசை. பெரும்பான்மையை நாராயணசாமி நிரூபிப்பதற்கான அலுவல் பணிகள் தவிர வேறு எந்தப் பணிகளும் 22-ம் தேதி நடக்கக்கூடாது எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
பெரும்பான்மைக்குத் தேவை 15 எம்.எல்.ஏ.க்கள். ஆனால், காங்கிரசுக்கு 10, அதன் கூட்டணிக் கட்சியான திமுகவுக்கு 3, காங்கிரசை ஆதரிக்கும் சுயேட்சை 1 என 14 பேர் நாராயணசாமியிடம் இருக்கிறார்கள். அதேபோல எதிர்க்கட்சி வரிசையிலும் 14 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள்.
இந்த நிலையில், பெரும்பான்மையை நிரூபிக்க நடக்கவிருக்கும் ஓட்டெடுப்பில் நாராயணசாமி ஆட்சி கவிழும் எனத் திடமாக நம்பும் எதிர்க்கட்சிகள், “சபாநாயகரையும் சேர்த்துதான் காங்கிரஸ் தரப்புக்கு 14 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். அதேசமயம், வாக்கு எண்ணிக்கையில் இரு தரப்பும் சரிசமமாக ஓட்டுகள் பெற்றிருந்தால் மட்டும்தான் சபாநாயகருக்கு வாக்களிக்கும் உரிமை உண்டு. அதற்கு முன்னதாக அவர் வாக்களிக்க முடியாது. அதனால், ஆளும் கட்சிக்கு ஆதரவான எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஓட்டெடுப்பில் கலந்துகொண்டாலும், காங்கிரசுக்கு 13 வாக்குகள் விழுவதற்குத்தான் சாத்தியம். அதேசமயம் எதிர்க்கட்சிகள் வரிசையில் 14 வாக்குகள் அப்படியே விழும். அதனால், நாராயணசாமியால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது’’ என்கின்றனர்.
எதிர்க்கட்சிகளின் எதிர்பார்ப்புகளும் எண்ணங்களும் இப்படியிருக்க, அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களிடம் அவசார ஆலோசனை நடத்தியிருக்கிறார் முதல்வர் நாராயணசாமி. அமைச்சர்களிடம் அவர் பேசும்போது, “பாஜகவின் நியமன எம்.எல்.ஏ.க்கள் 3 பேரை சேர்த்துதான் எதிர்க்கட்சிகளின் எண்ணிக்கை 14 ஆக இருக்கிறது. ஆனால், நியமன எம்.எல்.ஏ.க்கள் மூவருக்கும் ஓட்டுரிமை கிடையாது. அப்படியானால், எதிர்க்கட்சி வரிசையில் 11 எம்.எல்.ஏ.கள்தான் இருப்பார்கள். 2 ஓட்டுகள் வித்தியாசத்தில் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள முடியும். ஆட்சிக்கு ஆபத்தில்லை” என்று நம்பிக்கைத் தெரிவித்து வருகிறாராம்.
இந்தநிலையில், பெரும்பான்மையை நிரூபிக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் நியமன எம்.எல்.ஏ.க்களின் ஓட்டுரிமை குறித்து சட்டச் சிக்கல்களும் சர்ச்சைகளும் உருவாகலாம் என்று சட்ட வல்லுநர்கள் மத்தியில் விவாதங்கள் எதிரொலிக்கின்றன.
இதற்கிடையே, வாக்கெடுப்பு நடக்கும் நாளில் சட்டப்பேரவையில் எத்தனை எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொள்கிறார்களோ அதில் பெரும்பான்மையை நிரூபித்தாலும் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள முடியும் என்பதால், என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சிலரை, ஓட்டெடுப்பு நாளில் லீவ் எடுத்துக்கொள்ள வைக்கும் மறைமுக முயற்சியில் நாராயணசாமி தரப்பு ஈடுபட்டுள்ளது.
இதே டெக்னிக்கைப் பயன்படுத்தி, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சிலரை லீவ் எடுக்க வைக்கும் முயற்சியை, பாஜகவுக்கு சமீபத்தில் தாவிய அமைச்சர்களும் எம்.எல்.ஏ.க்களும் எடுத்து வருவதால் புதுவை அரசியலில் ஏக பரபரப்பு நிலவி வருகிறது.