
















தென் மாவட்டத்தின் 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற தலைப்பில் தி.மு.க.வின் தலைவர் மு.க.ஸ்டாலின் பரப்புரை நடத்திய தொகுதிகளையே டார்கெட்டாக வைத்து, தனது தேர்தல் பரப்புரையை நடத்திவருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. பரப்புரை நடத்தப்படுகிற இடங்களில் எல்லாம் தான் செயல்படுத்திய திட்டங்களை மட்டுமே முன்னிலைப்படுத்துகிறார் எடப்பாடி பழனிசாமி.
பொதுவாக அ.தி.மு.க.வி்ன் தலைவியான ’ஜெ’ தேர்தல் பிரச்சாரத்திற்காக வரும்போதெல்லாம், அ.தி.மு.க.வினர் நகரமெங்கும் வாழ்த்து கட் அவுட்கள் மற்றும் பெண்களைக் கொண்டு கும்ப மரியாதை அணி வகுப்பு நடத்துவர். தற்போது எடப்பாடி பழனிசாமி பரப்புரைக்காக தென் மாவட்டம் வந்தபோது அவருக்கான வரவேற்புகள் ’ஜெ’வையும் மிஞ்சிவிட்டன. அனைத்துப் பகுதிகளிலும் இது போன்று தான். குறிப்பாக மகளிர் மற்றும் அ.தி.மு.க.வின் தொழில்நுட்ப அணிகளுடன் கலந்துரையாடல் கூட்டத்தின் மேடையின் பின்னே மெகா திரை பளிச்சிடும். அதில், செயல்படுத்தப்பட்ட திட்டங்களை டிஜிட்டல் வீடியோவாக்கி 'எடப்பாடியாருக்கு நன்றி' என்ற கெட்டப்புடன் வீடியோ ஒளிபரப்பி பரப்புரையைக் கொண்டு செல்கின்றனர் ஐ.டி. அணியினர்.
குறிப்பாக, சங்கரன்கோவிலில் மனதிற்குள் தோன்றும் வார்த்தைகளை எல்லாம் வரவேற்பு கட் அவுட்களாக்கி நகரையே கட் அவுட்களால் போர்த்தியிருந்தனர் அ.தி.மு.கவினர். ஐ.டி. அணியின் ஏற்பாட்டில் கேரள பெண்கள் போன்று வெண்பட்டு உடுத்தி, வெண் கொற்றக் குடையுடன், கேரள செண்டை மேளங்கள் முழங்க, பெண்களின் வரவேற்பு, கும்ப மரியாதை வரவேற்பு மேலும் விவசாயிகளுக்கு ஆதரவு என்பதை வெளிப்படுத்துகிற வகையில் 50- க்கும் மேற்பட்ட சிறுவர்களின் தலையில் பச்சைத் தலைப்பாகை கட்டி, எடப்பாடியை வரவேற்கும் வகையில் வரிசையாக நிறுத்தப்பட்டனர். இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்ட சிறுவர்கள், வாடிப் போய்விட்டனர்.
பிரச்சாரப் பகுதிகளில் எல்லாம் ஒரேமாதிரியான பரப்புரையை வைத்துக் கொள்ளும் எடப்பாடி பழனிசாமி, முஸ்லிம் மக்கள் அதிகமாக இருக்கும் கடையநல்லூரில் குடியுரிமைக்கு எதிராகப் போராடியவர்களின் மீதான வழக்குகள் ரத்து செய்யப்படும். பள்ளிவாசல்கள், தர்காக்கள் புனரமைக்க ரூபாய் 3 கோடி தொகுப்பு நிதியாக வழங்கப்பட்டுள்ளது என்றார்.
கூடங்குளம் அணு உலைக்கு எதிராகப் போராடிய நூற்றுக்கணக்கானவர்கள் மீதான வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி வருடங்களாகக் கிடப்பில் போடப்பட்டிருந்தது. தற்போதைய தேர்தலை மனதில் கொண்டு, அந்த வழக்குகளையும் ரத்து செய்வது பரிசீலனையில் உள்ளது என்று அறிவித்தார்.
பிரச்சாரம் முடிந்து கூட்டம் கலைந்தநேரத்தில் வரவேற்பிற்காக வைக்கப்பட்ட கரும்புகள், வாழைக் குலைகளைக் கூட்டத்தினர், போட்டி போட்டுக் கொண்டு பிய்த்தெடுத்துச் சென்றனர்.