நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. இதன் ஒரு பகுதியாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (25.03.2024) பிரச்சாரம் மேற்கொண்ட போது, “நானாவது எய்ம்ஸ் செங்கல்லை காட்டினேன். ஆனால் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியிடம் பல்லை காட்டுறாரு” எனத் தெரிவித்து பிரதமர் மோடியுடன் எடப்பாடி பழனிசாமி இருக்கும் படத்தை காண்பித்திருந்தார்.
இந்நிலையில் தூத்துக்குடியில் அ.தி.மு.க. வேட்பாளர் சிவசாமியை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “அ.தி.மு.க. கூட்டணி பற்றி பத்திரிகை மற்றும் ஊடகங்களில் விமர்சனம் செய்யப்படுறது. கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க.வுடன் கூட்டணி அமைத்து வெற்றி பெற்றோம். பின்னர் தே.மு.தி.க. எதிர்க்கட்சியாக இருந்தது. ஆனால், தற்போது இரண்டு கட்சிகளும் மீண்டும் ஒன்றிணைந்துள்ளதால் வெற்றி நிச்சயம். அ.தி.மு.க.வும், தேமுதிகவும் சேர்ந்து பலம் வாய்ந்த கூட்டணியாக மாறியுள்ளது.
தி.மு.க. கூட்டணியில் உள்ளவர்கள் எந்த பிரச்சனைகள் குறித்தும் வாய் திறப்பதில்லை. தி.மு.க. ஆட்சியில் ஒரு புயலையே தாக்குப்பிடிக்க முடியவில்லை. அ.தி.மு.க. ஆட்சியில் பல புயல்களை திறம்பட எதிர்கொண்டுள்ளோம். டிசம்பர் மாதம் சென்னை வானிலை ஆய்வு மையம் மழை வரும் என அறிக்கை விட்டது ஆனால் எந்தவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தி.மு.க. அரசு எடுக்கவில்லை. கனமழையில் தூத்துக்குடி மிதந்து கொண்டிருந்த போது டெல்லி சென்றவர் முதல்வர் மு.க. ஸ்டாலின். மழை பாதித்த விவசாயிகளுக்கும், பழுதான வாகனங்களுக்கும் இழப்பீடு தராத அரசு தி.மு.க. அரசு.
மக்களுக்கு துன்பம் ஏற்படும் போது ஒரு அரசு ஓடோடி வந்து உதவி செய்திட வேண்டும். ஓட்டு போட்டு எந்த உதவியும் செய்யாத அரசு தமிழ்நாட்டுக்கு தேவையா. அ.தி.மு.க. ஆட்சியில் தூத்துக்குடிக்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தூத்துக்குடி பக்கிள் ஓடை 80% வேலைகளை அ.தி.மு.க. ஆட்சியில் செய்து முடித்திருந்தோம். மக்களுக்காக பக்கிள் ஓடை பணியை தி.மு.க. அரசு முடிக்கவில்லை. அது முடிக்கப்பட்டிருந்தால் தூத்துக்குடி மாவட்டம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இருக்காது.
அ.தி.மு.க. - பா.ஜ.க.வுடன் கள்ள கூட்டணி வைத்திருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்கிறார். ஆட்சி அதிகாரத்திற்கு ஆசைப்பட்டு தி.மு.க. தான் பா.ஜ.க.வுடன் கள்ள கூட்டணி வைத்துள்ளது. கள்ளக்கூட்டணியை யார் வைத்துள்ளனர் என்பது மக்களுக்கு தெரியும். நாங்கள் நினைத்திருந்தால் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. உடன் கூட்டணி வைத்திருக்க முடியும் ஆனால் நாங்கள் சுயமாக முடிவெடுத்து செயல்பட்டு வருகிறோம்; எங்களுக்கு மக்கள் பெரியது, தி.மு.க.வினருக்கு ஆட்சி பெரியது. அ.தி.மு.க. யாருக்கும் மறைமுகமாக ஆதரவை தர மாட்டோம். அ.தி.மு.க.வுக்கு பதவி வெறி கிடையாது.
ஆளுநரால் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. பின்பு ஏன் நாங்கள் ஆளுநரைப் பற்றி பேச வேண்டும். பழனிசாமி சிரித்துக் கொண்டே இருப்பேன் என நினைக்க வேண்டாம். நான் வாயைத் திறந்தால் என்ன ஆகும் என்று தெரியாது. பிரதமர் தமிழகம் வந்தபோது தமிழக முதல்வராக இருந்த நான் பல் இளித்தேன் என்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். நீங்கள் என்ன பண்ணிக்கிட்டு இருக்கிறீர்கள்?. நீங்களும் அதேதானே பண்ணிக்கிட்டு இருக்கீங்க?. நீங்கள் சிரிச்சா சரி, நான் சிரிச்சா தப்பா?” எனக் கேட்டு பிரதமர் மோடியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலினும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் சந்தித்த படங்களை காண்பித்தார்.
அதே சமயம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வேலூரில் தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த்திற்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் போது, எடப்பாடி பழனிசாமி முதல்வராக சசிகலாவால் அறிவிக்கப்பட்ட போது அவரது காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய போட்டோவை காண்பித்து, “கீழே சில்லறை விழுந்துவிட்டது. சில்லறையை தேடிக்கொண்டிருக்கிறார். இது மாதிரி ஒரு போட்டோ நான் யார் காலிலாவது விழுந்த மாதிரி காட்டுங்க. அரசியலை விட்டே விலகிவிடுகிறேன். முதல்வர் மு.க. ஸ்டாலின் இவரை எடப்பாடி பழனிசாமி என அழைக்கமாட்டார். பாதம் தாங்கி பழனிசாமி என்றுதான் அழைப்பார்” எனப் பதிலடி கொடுத்தார்.