மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என்றும் அதற்காக 1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் கர்நாடக மாநில நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார் சமீபத்தில் கூறியிருந்தார். இது தமிழ்நாடு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், “காவிரிப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புகளில் மேகதாது பற்றி குறிப்பிடப்படவில்லை. மேகதாதுவோ அல்லது அனுமதிக்கப்படாத கட்டுமானங்களோ தமிழ்நாட்டின் நலனை பாதிக்கும். எனவே, தமிழ்நாட்டிற்கு உரிமையுள்ள கட்டுப்பாடற்ற நீர்பிடிப்புப் பகுதியில் (uncontrolled intermediate catchment) மேகதாதுவில் அணை கட்டுவோம் என்று கூறுவது வரவேற்கத்தக்கதல்ல. கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட திட்டமிடுவதை தமிழ்நாடு அனைத்து நிலைகளிலும் எதிர்க்கும்” எனக் கூறி இருந்தார்.
தொடர்ந்து கர்நாடக மாநில துணை முதல்வரும் நீர்ப்பாசனத் துறை அமைச்சருமான டி.கே.சிவகுமார் தனது ட்விட்டர் பதிவில், "மேகதாதுவில் அணை கட்ட ரூ. 1000 கோடி அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்னும் அந்த பணம் செலவிடப்படவில்லை. இந்த திட்டத்தை செயல்படுத்த அந்த பணம் பயன்படுத்தப்படும். தமிழ்நாட்டு சகோதரர்கள் மீது கோபமோ வெறுப்போ இல்லை. அவர்கள் நம் சகோதர சகோதரிகளைப் போன்றவர்கள். கர்நாடகாவில் வாழும் தமிழர்களும் தமிழகத்தில் வாழும் கன்னடர்களும் காவிரி நீரை குடித்து வருகின்றனர். மேகதாது திட்டத்தின் மூலம் இரு மாநிலங்களும் பயனடையும். இதன் மூலம் காவிரி டெல்டா விவசாயிகளுக்கு பாசன நீரும் சாமானியர்களுக்கு குடிநீரும் வழங்கப்படும். மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பாக தமிழக அரசிடம் முறையிடுவேன். அண்டை மாநிலங்களில் உள்ள சகோதர சகோதரிகளாக வாழ விடுங்கள். ஒருவருக்கொருவர் உதவி செய்து ஒன்றுபடுவோம்" என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதில், டி.கே சிவக்குமார், அணை கட்டப்பட்டால் இரு மாநில மக்களும் பயனடைவார்கள். தமிழக மக்களை நான் வெறுக்கவில்லை. தமிழக அரசுடன் இணைந்து பேசி செயல்படவும் தயார் என்று சொல்லியுள்ளார். மேகதாது விவகாரத்தில் சமரசத்திற்கு இடம் இருக்கிறதா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த அமைச்சர் துரைமுருகன், “இதைத்தான் முதலிலேயே நான் சொன்னேன். அவர் இப்போது தான் பதவிக்கு வந்துள்ளார். காவிரிப்பிரச்சனையை முழுக்க அவர் அறிந்திருக்க நியாயமில்லை. மேகதாது கட்டினால் தமிழ்நாட்டிற்கு வரும் தண்ணீர் பெருமளவில் பாதிக்கப்படும். ஆகையால் எந்த ரூபத்திலும் எந்த பேச்சுவார்த்தையிலும் மேகதாது கட்டுவதை தமிழ்நாடு ஒருபோதும் அனுமதிக்காது. காவேரி நடுவர் மன்றத்திலும் மேகதாது அணை கட்டு பிரச்சனையே வரவில்லை. காவேரி நடுவர் மன்ற தீர்ப்பினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கிலும் இப்பிரச்சனை எழவில்லை. இடையில் சிலர் இதை தூக்கி பிடித்துக்கொண்டுள்ளார். அதைத்தான் சிவக்குமார் தெரிவித்துள்ளார்” என்றார்.