சி.ஏ.ஜி. அறிக்கை தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “2011ல் இருந்து 2021 வரை மத்திய அரசால் அனுமதிக்கப்பட்ட 5.09 லட்சம் வீடுகளில் 2.8 லட்சம் வீடுகள் மட்டுமே கட்டியுள்ளனர். கட்டப்பட்ட வீடுகள் குறித்து முறையான தகவல்கள் குறித்து வைக்கப்படவில்லை. குறிப்பாக யாரையெல்லாம் வீடு கட்டும் திட்டத்தில் தகுதியான நபர்களாக தேர்ந்தெடுத்துள்ளோம், கட்டப்பட்ட வீடுகள் எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து முறையாக அப்டேட் செய்யப்படவில்லை. இதனால் மத்திய அரசிடம் இருந்து நமக்கும் வரவேண்டிய 1515 கோடி ரூபாய் வராமல் சென்றுவிட்டது. அவர்கள் நிறுத்தி வைத்துவிட்டார்கள். இந்த திட்டத்தில் அதிமுகவினர் 2.18 கோடி ரூபாய் செலவை தேவையற்ற செலவாக செய்துள்ளார்கள் என்பதை சிஏஜி அறிக்கை சொல்கிறது.
எஸ்.சி, எஸ்.டி. மக்களுக்கு முறையாக வழங்கப்பட வேண்டிய வீடுகள் வழங்கப்படாமல் இருக்கிறது. அம்மக்களை எந்த அளவிற்கு வஞ்சித்துள்ளனர் என்பதை என்னால் சொல்ல முடியும். சி.ஏ.ஜி. அறிக்கையில் தெளிவாக சொல்லியுள்ளார்கள். நாகை மாவட்டத்தில் கொற்கை எனும் ஒன்றியத்தில் அம்மாசி எனும் பயனாளி காத்திருப்பு பட்டியலில் இன்னும் இருக்கிறார். அவருக்கு வழங்கப்பட வேண்டிய வீட்டை பிசி பிரிவைச் சேர்ந்த செந்தில் குமார் என்பவருக்கு வழங்கியுள்ளனர். இன்னொரு விஷயம் திருச்சியை சார்ந்தவர்களின் வீடு மேப்பிங்கில் லக்னோவில் காட்டுகிறது. கடலூரைச் சேர்ந்தவரின் வீடு வங்காள விரிகுடாவில் காட்டுகிறது. ஒவ்வொரு செயலிலும் அலட்சியமாக இத்திட்டத்தை கையாண்டுள்ளார்கள். கிட்டத்தட்ட 3354 வீடுகளுக்கு முறைகேடாக ரூ.50 கோடிக்கும் மேற்பட்ட தொகை செலவு செய்யப்பட்டுள்ளது.
திமுக அரசு வந்த பின் ரூ.2492 கோடி ரூபாய் மத்திய அரசிடம் இருந்து வீடு கட்டுவதற்காக நாம் பெற்றுள்ளோம். முறைகேடாக கட்டப்பட்ட வீடுகளில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் 6 பேரை பணியிடை நீக்கம் செய்துள்ளோம். நீதிமன்றத்தின் வழிகாட்டுதல் படி தனியாக குழு அமைக்கப்பட்டு ஆய்வு செய்து வருகிறோம்” எனக் கூறினார்.