காட்டுமன்னார்கோயில் வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ25 லட்சமும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பும் வழங்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் கூறியுள்ளார்.
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார் கோயிலுக்கு அருகில் உள்ள குறுங்குடி என்னும் கிராமத்தில் தனியார் பட்டாசு ஆலை ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் 9 பேர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். தகவல் அறிந்த சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி உறுப்பினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல் திருமாவளவன் உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா ரூ 10,000 வழங்கி அவரது உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த வெடி விபத்திற்குக் காரணமான அனைவர் மீதும் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். விபத்தில் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் தலா 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.
வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் அறிவித்திருப்பது ஏமாற்றமளிக்கிறது. இழப்பீட்டுத் தொகையை 25 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
ஒவ்வொரு ஆண்டும் பட்டாசு ஆலைகளில் ஏற்படுகிற வெடி விபத்தின் காரணமாகப் பலர் இப்படி உயிரிழப்பது வாடிக்கையாகி வருகிறது. இதை முறைப்படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். குறுங்குடியில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலை உரிய அனுமதி பெற்று நடத்தப்பட்டதா? அதற்கு அனுமதி வழங்கிய அதிகாரிகள் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக சரியாக சோதனை செய்து சான்று அளித்தார்களா? என்ற கேள்வி எழுகிறது. இது தொடர்பாகத் தமிழக அரசு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
தீபாவளி நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் தமிழ்நாடு முழுவதும் நடத்தப்படுகின்ற பட்டாசு ஆலைகளைக் கண்காணிக்க சிறப்பு குழு ஒன்றைத் தமிழக அரசு அமைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம் என்றார்.