நீண்ட மாதங்களாக நிலுவையில் இருந்த 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் அடுத்த அக்டோபர் மாதம் 2 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதற்கான தேதிகளை மாநில தேர்தல் ஆணையத்தின் ஆணையர் பழனிகுமார் அறிவித்திருக்கிறார்.
தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், தென்காசி, நெல்லை ஆகிய 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் நிலுவையில் இருந்து வந்தது. திமுக ஆட்சி வந்ததும் இதற்கான தேர்தலை நடத்துவதற்கான பணிகளில் வேகம் காட்டியது மாநில தேர்தல் ஆணையம். ஏற்கனவே செப்டம்பர் 15-க்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்திருந்த நிலையில், சட்டமன்ற கூட்டம் நடந்து வந்ததால் தேர்தல் தேதியை அறிவிக்காமல் காத்திருந்தது ஆணையம்.
சட்டமன்ற கூட்டம் இன்று (13.9.21) மதியத்தோடு முடிவடையும் நிலையில், மாலை 5 மணிக்கு தேர்தல் தேதியை அறிவிப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி இன்று மாலை 5 மணிக்கு பத்திரிகையாளர்களை சந்தித்த ஆணையர் பழனிகுமார், தேர்தல் தேதியை அறிவித்தார்.
அதன்படி, 9 மாவட்டங்களிலும் ஊரக உள்ளாட்சிகளுக்கான வேட்பு மனுத்தாக்கல் துவக்கம் : செப்டம்பர் 15 , வேட்புமனுத்தாக்கல் முடிவு : செப்டம்பர் 22 , வேட்புமனு பரிசீலனை : செப்டம்பர் 23 , வேட்புமனுவை திரும்ப பெற கடைசி நாள் : செப்டம்பர் 25 , முதல்கட்ட தேர்தல் தேதி : அக்டோபர் 6 , இரண்டாம் கட்ட தேர்தல் தேதி : அக்டோபர் 9 , வாக்கு எண்ணிக்கை : அக்டோபர் 12 -என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. பணியாளர் பற்றாக்குறை மற்றும் நிர்வாகக் காரணங்களால் இந்த தேர்தலை இரண்டு கட்டங்களாக நடத்துகிறது ஆணையம்.
தேர்தல் நடக்கும் 9 மாவட்டங்களிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக நடைமுறைக்கு வருகிறது. அக்டோபர் 16-ந்தேதி வரை நடத்தை விதிகள் அமலில் இருக்கும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், திமுக, அதிமுக கட்சிகளிலும், அதன் கூட்டணி கட்சிகளிலும் தேர்தல் ஜூரம் பற்றிக் கொண்டிருக்கிறது. கடந்த சட்டமன்ற தேர்தலின் போது உருவான கூட்டணிகள் அப்படியே தொடருமா? அல்லது உடையுமா? என்பது ஓரிரு நாளில் தெரிய வரும். ஏனெனில், கூட்டணி கட்சிகள் அனைத்துமே கௌரவமான இடங்களில் போட்டியிட துடிக்கின்றன என்பதுதான்.