சட்டசபையில் நேற்று (06.09.2021) நடந்த கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறைக்கான மானிய கோரிக்கை விவாதத்தில் திமுக உறுப்பினர் ஐட்ரீம் இரா. மூர்த்தி பேசினார். அப்போது அவர் தனது பேச்சை தொடங்குவதற்கு முன் எம்.ஜி.ஆர். பாடல் ஒன்றை ராகத்துடன் பாடியுள்ளார்.
“எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, சொந்த நாட்டிலே, நம் நாட்டிலே. சத்தியம் தவறாத உத்தமன் போலவே நடிக்கிறார். சமயம் பார்த்து பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார். பக்தனை போலவே பகல் வேஷ காட்டி, பாமர மக்களை வலையினில் வீழ்த்தி...” என்று பாடினார். அதன் பின்னர் பேசிய அவர், ‘கடந்த 20 ஆண்டுகளாக ராயபுரம் சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஒருவரைப் பற்றிதான் இப்போது பாடினேன்’ என்றார்.
அதற்கு அதிமுக உறுப்பினர்கள் எழுந்து கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது, அவை முன்னவர் துரைமுருகன் எழுந்து, “பொதுவாக அவையில் இல்லாதவர்கள் பெயரைச் சொல்லக்கூடாது. அப்படி சொல்லியிருந்தால் அவற்றை எடுத்துவிடலாம். ஆனால் உறுப்பினர் யார் பெயரையும் சொல்லவில்லை” என்றார்.