தி.மு.க தொடங்கி 75 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி பவள விழாவும், ஆண்டுதோறும் கொண்டாடப்படும் முப்பெரும் விழாவும் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் கடந்த 17ஆம் தேதி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் மூலம் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் உரையாற்றினார். இதனையடுத்து தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், பெரியார் விருது பாப்பம்மாளுக்கும், அண்ணா விருது அறந்தாங்கி 'மிசா' இராமநாதனுக்கும், பாவேந்தர் விருது கவிஞர் தமிழ் தாசனுக்கும், பேராசிரியர் விருது வி.பி. ராசனுக்கும், கலைஞர் விருது எஸ். ஜெகத்ரட்சகனுக்கும், மு.க. ஸ்டாலின் விருது எஸ்.எஸ். பழனிமாணிக்கத்திற்கும் வழங்கினார்.
இந்த நிலையில், இன்று (28-09-24) காஞ்சிபுரத்தில் திமுகவின் பவள விழா பொதுக்கூட்டம் தொடங்கியது. திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்களான, வைகோ, கி.வீரமணி, தொல்.திருமாவளவன், செல்வப்பெருந்தகை, கே.பாலகிருஷ்ணன், முத்தரசன், ஜவாஹிருல்லா உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
இதில் தி.மு.க கூட்டணியில் இருக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் அனுப்பிய வாழ்த்து அறிக்கை வாசிக்கப்பட்டது. கமல்ஹாசன் அனுப்பிய வாழ்த்துரையில் அவர் கூறியிருப்பதாவது, “தமிழர்களின் நலன்களுக்காக களமாடுவதில் தி.மு.க என்றும் சளைத்ததில்லை. 75 ஆண்டுகள் கண்ட பேரியக்கம் நூற்றாண்டு காண வாழ்த்துகிறோம். தவிர்க்கவே இயலாத காரணங்களால் என்னால் நேரில் பங்கேற்க இயலவில்லை. திமுக எனும் கோட்டை இருக்கும் வரை தமிழ்நாட்டில் இருந்து ஒரு செங்கலைக் கூட எவரும் எடுக்க முடியாது. கோட்டைச் சுவரில் கீறல் விழாதா என காத்திருப்போரின் பகல் கனவு பலிக்கப் போவதில்லை” என்று தெரிவித்திருக்கிறார்.