அரியலூர் மாவட்டம், கொல்லாபுரம் பகுதியில், ரூ.120 கோடி மதிப்பிலான வளர்ச்சி 53 திட்டப்பணிகளுக்குத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று(15.11.2024) அடிக்கல் நாட்டினார். அதன் பின்னர், ரூ.88 கோடி மதிப்பிலான 507 முடிவற்ற திட்டங்களை தொடங்கி வைத்தார். மேலும், 21,862 பயணாளிகளுக்கு ரூ.174 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அதன் பிறகு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
அந்த உரையில் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் குறித்துப் பேசிய முதல்வர், “இந்த விழாவை, அரசுப் பெருவிழாவாக ஏற்பாடு செய்திருக்கும் போக்குவரத்துத் துறை அமைச்சர் ‘அரியலூர் அரிமா’ எஸ்.எஸ்.சிவசங்கருக்கும், பொம்பலூர், அரியலூர் மாவட்டத்தின் ஆட்சியர்களுக்கும். அரசின் அனைத்துத் துறை அதிகாரிகளுக்கும், அலுவலர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகள், பாராட்டுக்கள்.
இந்த விழாவிற்காக மட்டுமல்ல: இன்னும் பல பாராட்டுகளுக்கு தகுதியானவர் நம்முடைய சிவசங்கர். 2021 மே 7-ஆம் தேதி. ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ என்று பதவியேற்றேன். பதவியேற்று கோட்டைக்கு வந்து நான் போட்ட முதல் கையெழுத்தே மகளிருக்கு கட்டணமில்லாத விடியல் பயணத் திட்டத்திற்குதான். உழைக்கும் மகளிர்க்கு உறுதுணையாகவும், அவர்கள் பொருளாதார ரீதியாக உயா அடித்தளமிடும் திட்டமாகவும் இந்த திட்டம் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இந்த திட்டம் தொடங்கப்பட்டது முதல், மகளிர் தற்போது வரைக்கும் 575 கோடி முறை பயணங்கள் மேற்கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டுப் பெண்களின் சமூகப் பங்களிப்பை திட்டத்திற்கு அதிகரித்து இருக்கக்கூடிய இந்த மகத்தான பொறுப்பேற்றுக்கொண்டு செயல்படுத்தி வருகின்றவர்தான், நம்முடைய சிவசங்கர் என்பதை நான் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்னால், பண்டிகைக் காலங்களில் சென்னையிலிருந்து தங்களின் சொந்த ஊர்களுக்கு மக்கள் புறப்படும்போது பேருந்துகள் கிடைக்காமல் நெருக்கடியை சந்தித்தார்கள். போதுமான பேருந்துகள் இல்லாமல் கூட்டம் கூட்டமாக பேருந்துகளில் இடம் கிடைக்காமல் சிரமப்பட்டு போகும் காட்சியெல்லாம் செய்திகளில் தொடர்ந்து வந்தது. இன்றைக்கு நிலைமை மாறி இருக்கிறது. சமீபத்தில் தீப ஒளி நாள் விடுமுறைக்கு சென்னையிலிருந்து மக்கள் அவரவர்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டபோது. 'கடைசி பேருந்தும் புறப்பட்ட பிறகுதான் நான் அரியலூருக்கு புறப்படுவேன்’ என்று போக்குவரத்து வசதிகளை எற்பாடு செய்து கொடுத்துவிட்டு. அரியலூருக்கு வந்தவர்தான் சிவசங்கர்.
எனவே, அவருடைய பணிகளை நான் மனதான பாராட்டுகிறேன். இதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சியும், பெருமையும் இருக்கிறது. ஏனென்றால், சிவசங்கர், அரசியலில் எங்களுக்கெல்லாம் வழிகாட்டியாக இருந்த அண்ணன் சிவசுப்பிரமணியம் அவர்களுடைய மகன். என்னால் வார்ப்பிக்கப்பட்ட சிவசங்கர் இந்த விழாவை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கிறார்” என்றார்.
மேலும் பேசிய அவர், நம்முடைய அமைச்சர் சிவசங்கரின் கோரிக்கையை ஏற்று, முக்கியமான திட்டங்கள் சிலவற்றை இப்போது இந்த மேடையில் அறிவிக்க இருக்கிறேன்.அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் நதியனூர் கூட்டுக் குடிநீர்த் திட்டம். வெற்றியூர் கூட்டுக் குடிநீர்த் திட்டம், ஜெயங்கொண்டம் மற்றும் உடையார்பாளையம் நகரங்களுக்கான கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள். 3 கோடியே 20 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அவைகள் மேம்படுத்தப்படும். அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 645 கிராம குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர்த் திட்டம், 42 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டு. தடையின்றி போதிய குடிநீர் வழங்கப்படும். அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையத்திற்கு 4 கோடியே 30 இலட்சம் ரூபாய் செலவில் புதிய கட்டடம் கட்டப்படும் என பல்வேறு திட்டங்களையும் அறிவித்தார்.