மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்கூட்டம் திருச்சியில் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் நேற்று மதியம் சென்னையில் இருந்து வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் திருச்சி புறப்பட்டார்.
பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்களும் கமல்ஹாசனுடன் ரெயிலில் பயணம் செய்தனர். அப்போது அவர்களுக்கு கமல்ஹாசன் பேட்டியளித்தார்.
கேள்வி:- தமிழக அரசியல் எப்படி இருக்கிறது?.
பதில்:- சீர்திருத்தப்பட வேண்டிய நிலையில் இருக்கிறது. அது மக்களின் கடமையும் கூட. யாரோ ஒரு அரசியல்வாதி வருவான். அவன் திருத்துவான் என்று நினைக்காமல், மக்கள் தன் பொறுப்பாக அதை ஏற்றுக்கொண்டு செயல்பட வேண்டும். அதை தொடங்கிவிட்டார்கள். அதற்கான அடையாளங்கள் தெரிவதாக நான் நம்புகிறேன்.
கேள்வி:- மக்கள் எப்படி செயல்பட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?.
பதில்:- முதலில் ஓட்டுபோட பணம் வாங்கக்கூடாது. அது தலையாய கடமை. ஓட்டுபோட்டே ஆக வேண்டும். இது 2-வது தலையாய கடமை. மற்றபடி, நீங்கள் யாரை தேர்ந்தெடுக்கிறீர்களோ, அவர்களிடம் துணிவாக கேள்விகளை கேட்க வேண்டும். அரசியல்வாதிகளுக்கு இருக்கும் சுயநலங்களை நீங்கள் பிரதிபலிக்கக்கூடாது.
கேள்வி:- தமிழகத்தில் கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் ‘நாளை நமதே’ பயணத்தை மேற்கொண்டு மக்களை சந்தித்து இருக்கிறீர்கள். மக்களின் எதிர்பார்ப்பு எண்ணவாக இருக்கிறது?.
பதில்:- நெஞ்சைப் பிழியும் படியாக இருக்கிறது. அவர்கள் ஏதாவது ஒரு வித்தியாசம் நடக்காதா என்று ஏங்குவதை பார்க்கும்போது நெஞ்சைப் பிழியும் ஒரு நம்பிக்கை. எங்களுக்கு இருக்கும் கடமை என்னவென்பதை எங்களுக்கே உணர்த்தியது. கண்ணீர்மல்க வைக்கும் நம்பிக்கை. “செஞ்சிருவீங்கல்ல... நம்பளாம்ல..” என்று கேட்கிறார்கள். இவ்வாறு கூறினார்.