கரூர் எம்.பி.தொகுதியில் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து கரூர் ராயனூரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். இந்த கூட்டத்தை கரூர் மாவட்ட பொறுப்பாளர் செந்தில் பாலாஜி ஏற்பாடு செய்திருந்தார். இந்த கூட்டத்தில் பேசிய வேட்பாளர் ஜோதிமணி, “பி.ஜே.பி.யின் பினாமி அரசான எடப்பாடி அரசு மத்தியில் ராகுல் காந்தி பிரதமரானதும் இருக்காது. பஞ்சாயத்து தேர்தலைக் கூட நடத்த திராணியில்லாத இந்த பினாமி அரசு பதவியில் நீடிக்க தகுதி இல்லை. தி.மு.க. தலைவர் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது மூலை முடுக்கெல்லாம் சென்று பஞ்சாயத்து கூட்டம் நடத்தியவர். இப்போது கிராமசபை கூட்டங்கள் நடத்தி மக்களை சந்தித்து வருகிறார்.
சாதாரண விவசாய குடும்பத்தைச் சேர்ந்த எனக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாய்ப்பளித்துள்ளார் எனக்கு வாக்களியுங்கள். புதிய கரூர் பகுதியை உருவாக்குவேன். பத்தாண்டுகளாக பதவியில் இருந்த, துணை சபாநாயகராக இருந்த அ.தி.மு.க. வேட்பாளர் தம்பிதுரை எதுவுமே செய்யாததால் அவர் போகிற இடங்களில் எல்லாம் மக்கள் விரட்டி அடிக்கிறார்கள்.
இப்படிப்பட்ட எம்.பி. உங்களுக்கு தேவையா? ஒரு சட்டமன்ற தொகுதியில் கல்லூரிகூட இல்லை. ஆனால், அவர் 45 கல்லூரிகள் வைத்துள்ளார். தொகுதியை சேர்ந்த ஒரு ஏழை மாணவனுக்கு ஒரு சீட்டு கொடுக்கவில்லை. ஆனால், தற்போது மருத்துவக்கல்லூரி கட்டிக் கொண்டிருக்கிறார். மக்களுக்காக எதையும் செய்யவில்லை. ஆனால் அவர் தனிப்பட்ட முறையில் தன்னை வளர்த்துக்கொண்டுள்ளார்.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சி வந்தால் விவசாய கடன், கல்விக் கடன் ஆகியவற்றை நாங்கள் தள்ளுபடி செய்கிறோம். தம்பிதுரையை நீங்கள் தள்ளுபடி செய்யுங்கள்” என்று பேசினார்.
இந்தக் கூட்டத்தில் திமுக துணை பொது செயலாளர் பெரியசாமி, முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, திமுக கொறடா சக்கரபாணி, முன்னாள் எம்.எல்.ஏ. கலைராஜன் மாநில நிர்வாகிகள் கே.சி.பழனிச்சாமி, சின்னசாமி ,நன்னியூர் ராஜேந்திரன், வழக்கறிஞர் மணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த பொதுகூட்டத்திற்கு பிறகு தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கரூர் முக்கிய வீதிகளில் நடந்து சென்று வாக்குசேகரித்தார்.