Skip to main content

“7 பேர் விடுதலை; தமிழக அமைச்சரவை தீர்மானம் இயற்ற வேண்டும்” - திருமாவளவன் 

Published on 21/05/2021 | Edited on 21/05/2021

 

The Tamil Nadu cabinet should pass a resolution ”- Thirumavalavan

 


முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்துவரும் பேரறிவாளன் உட்பட ஏழு பேரையும் விடுதலை செய்யவேண்டும் என்று தமிழக அமைச்சரவை 2018-ம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றியது. அந்த தீர்மானத்துக்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அதனை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளார். அந்த அமைச்சரவைத் தீர்மானத்துக்கு ஒப்புதல் அளிக்கவேண்டும் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார். 

 

இந்நிலையில், மீண்டும் ஒரு தீர்மானத்தை புதிய அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றி விரைவாக அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று விசிக கட்சியின் நிறுவன தலைவர் தொல்.திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாகக் குடியரசுத் தலைவர் விரைந்து முடிவெடுக்குமாறு தமிழ்நாடு அரசின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு இந்தப் பிரச்சனையில் காட்டியிருக்கும்  அக்கறையைப் பாராட்டுகிறோம்.  ஆனால் அதே நேரத்தில் மாநில அதிகாரத்தை விட்டுக்கொடுக்காமல் இந்த விடுதலையை சாத்தியப் படுத்துவதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும். அதற்கு மீண்டும் அமைச்சரவையில் தீர்மானம் இயற்றி ஆளுநருக்கு அனுப்ப வேண்டும் என்று வேண்டுகிறோம்.

 

கடந்த அதிமுக ஆட்சியின்போது அமைச்சரவையில் தீர்மானம் இயற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. அதை சுமார் 2 ஆண்டு காலம் கிடப்பில் போட்டிருந்த ஆளுநர் சிபிஐயின் பல்நோக்கு விசாரணை முடிவடையாததைக் காரணமாகக் கூறினார். ஆனால் அந்த விசாரணைக்கும் 7 பேர் விடுதலைக்கும் எந்தத் தொடர்பும் இல்லையென சிபிஐ உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது. அதன்பிறகும் முடிவெடுக்காமல் தாமதப்படுத்திவந்த ஆளுநர் கடைசியில் குடியரசுத் தலைவர்தான் இதில் முடிவெடுக்கவேண்டும். எனவே அவருக்கு அனுப்பி விட்டேன் என்று கூறிவிட்டார்.  அப்படி அவர் அனுப்பியிருந்தால் அது சட்ட விரோதமான நடவடிக்கையாகும். மாநில அரசின் அதிகாரத்தை மீறியதாகும்.

 

அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 161 தண்டனை குறைப்புச் செய்ய மாநில அரசுக்கு முழுமையான அதிகாரம் இருக்கிறது எனக் கூறுகிறது. அது பல்வேறு உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளின் மூலமாகவும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்நிலையில் தமிழக அரசு நல்லெண்ண அடிப்படையில் குடியரசுத் தலைவரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தாலும் அதில் மாநில அரசின் அதிகாரத்தைப் பறித்த ஆளுநரின் நடவடிக்கையை நியாயப்படுத்துவதாக அமையும் ஆபத்துள்ளது என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.

 

7 பேர் விடுதலையில் தமிழக அரசுக்கு அனைத்து அதிகாரமும் உள்ளது. மாநில உரிமையை விட்டுக்கொடுத்து பதவியில் ஒட்டிக்கொண்டிருந்தது அதிமுக. அவர்களின் தன்னலம் காரணமாகவே 7 பேர் விடுதலை இத்தனை ஆண்டுகள் தள்ளிப்போனது. அந்த தவறை சரிசெய்யவேண்டிய கடமை தற்போதைய அரசுக்கு உள்ளது. எனவே 7 பேரையும் விடுவிப்பதாக மீண்டும் அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பவேண்டும். அவரிடமிருந்து ஒப்புதல் வரும்வரை அவர்கள் 7 பேரையும் பரோலில் விடுவிக்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்” என்று அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“சங்பரிவார்களுக்கு துணை போகிற வகையில் சீமான் பேசுகிறார்” - தொல். திருமாவளவன் எம்.பி

Published on 05/08/2023 | Edited on 05/08/2023

 

Seeman speaks in a way that supports the Sangparivalavalas Tol Thirumavalavan mp

 

மணிப்பூர் வன்முறைச் சம்பவங்களைக் கண்டித்து, நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய சீமான், “பாதிக்கப்பட்ட மக்களுக்காக நாம் பேசுகிறோம். இதில் நமக்கு ஒரு லாபமும் இல்லை. மணிப்பூரிலிருந்து யாரும் நமக்கு ஓட்டு போடப் போவதில்லை. இங்கே இருக்கிற கிறிஸ்தவர்களும் ஓட்டு போடப் போவதில்லை. நாம் நினைச்சுக்கிட்டு இருக்கோம், கிறிஸ்துவத்தையும், இஸ்லாத்தையும் ஏற்றுக் கொண்டவர்கள் தேவனின் பிள்ளைகள் என்று, அது சாத்தானின் பிள்ளைகளாக மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த நாட்டில் நடந்த அநீதி அக்கிரமத்துக்கு பெரிய பொறுப்பேற்க வேண்டியது இஸ்லாமிய கிறித்துவ மக்கள் தான்" என்று கூறியிருந்தார். இது விவாதப் பொருளாக மாற நடிகர் ராஜ்கிரண் தனது கண்டனத்தை தெரிவித்திருந்தார்.

 

நடிகர் ராஜ்கிரண் கருத்து குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “சிஐஏ போராட்டத்துக்கு என்னுடன் உடன் வந்தாரா. முத்தலாக் தடை சட்டத்திற்கு வீதியில் நின்றாரா. அவர் வயதில் பெரியவர், நான் மதத்தைப் பற்றி பேசிவிட்டதாக நினைக்கிறார்” என்று கூறினார். அதனைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சீமான், “மதத்தின் அடிப்படையில் மனிதனுடைய எண்ணிக்கையை கணக்கிடுவதே தவறு. மதம் மாற்றிக்கொள்ள கூடியது. ஆனால் மொழி மற்றும் இனம் மாற்றிக் கொள்ள முடியாது. இளையராஜா பெரும்பான்மை. யுவன் ஷங்கர் ராஜா சிறுபான்மை. இது மாதிரி உலக பைத்தியக்காரத்தனம் எங்கயாவது இருக்கா. என் கட்சியில் சிறுபான்மை பிரிவு என்பது கிடையாது. இனிமேல் சிறுபான்மை என்று யாராவது கூறினால் செருப்பால் அடிப்பேன்” என்று ஆவேசமாகப் பேசினார். இது தொடர்பான வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் சர்ச்சையைக் கிளப்பியது.

 

இந்நிலையில், கடலூர் மாவட்டம் வேப்பூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தைத் திறந்து வைத்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “மொழி உணர்வு, இன உணர்வு வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், இந்தியா முழுவதும் இஸ்லாமியர்கள் என்ற உணர்வும், கிறிஸ்தவர்கள் என்ற உணர்வும் மட்டுமே அவர்களுக்கு பாதுகாப்பைத் தரக்கூடியது. அந்த உணர்வை சிதைக்க வேண்டும் என்பது தான் சங்பரிவார்களின் நோக்கம். அதே கருத்தை சீமான் போன்றவர்கள் தமிழ் தேசியம் என்ற பெயரில் சங்பரிவார்களுக்குத் துணை போகிற வகையில் பேசி வருவது அதிர்ச்சியளிக்கிறது. சங்பரிவார்கள் என்ன வெறுப்பு பிரச்சாரத்தை பரப்புகிறார்களோ அதே வெறுப்பு பிரச்சாரத்தை இவர்கள் முன்மொழிகிறார்கள். இது மிகவும் ஆபத்தானது. அவர் தமது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்று கூறினார்.

 

 

Next Story

உயர்நீதிமன்ற சுற்றறிக்கை விவகாரம்; விசிக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு 

Published on 24/07/2023 | Edited on 24/07/2023

 

 

High Court Circular Matter vck issue

தமிழ்நாட்டின் நீதிமன்றங்களில் மாகத்மா காந்தி, திருவள்ளுவரைத் தவிர வேறு எந்தத் தலைவரின் சிலைகளும், உருவப் படங்களும் வைக்கக் கூடாது என்று அனைத்து நீதிமன்றங்களுக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமைப் பதிவாளர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி இருந்தார். இந்தச் சுற்றிக்கைக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், சமூக அமைப்பினரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

 

இந்த சுற்றறிக்கையை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் நீதிமன்ற வாயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதே போன்று கல்லூரி மாணவர்களும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

 

இந்நிலையில், இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் எம்.பி. தனது ட்விட்டர் பதிவில், “புரட்சியாளர் அம்பேத்கரின் திருவுருவப் படம் அல்லது திருவுருவச்சிலை போன்றவற்றை நீதிமன்ற வளாகங்களில் நிறுவிடக்கூடாதெனவும் ஏற்கனவே அவ்வாறு வைக்கப்பட்டிருந்தால் அப்புறப்படுத்த வேண்டுமென உயர்நீதிமன்ற பதிவாளர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையைத் திரும்பப் பெற வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழ்நாடு தழுவிய அளவில் மாபெரும் ஆர்ப்பாட்டங்கள் மாவட்டங்கள் தோறும் நடைபெறும். தோழமைக் கட்சிகளையும் ஒருங்கிணைத்து நடத்தப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.