இந்திய தேசிய காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் மாணிக்கம் தாகூர் எம்.பி. விருதுநகரில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார்.
“அதானியின் நலனுக்காக மட்டுமே செயல்படக்கூடிய அரசாக பாஜக அரசு மாறியிருக்கிறது. இந்த அரசு குறித்து ராகுல் காந்தி அவர்கள் பேசிய பேச்சு பாராளுமன்றத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை உருவாக்கியிருக்கிறது. அவர் கேட்ட நான்கு கேள்விகளுக்கு பாராளுமன்றத்தில் பதில் சொல்ல முடியாமல் மோடி புலம்பிய புலம்பல்களைப் பார்க்க முடிந்தது. பாராளுமன்றத்தில் மோடி அவர்கள் இரண்டு பேருடைய பெயர்களை உச்சரிப்பதை தவிர்த்தது நமக்குப் புரிந்தது. மோடி ராகுல் காந்தியை உள்ளத்தாலும் உணர்வாலும் வெறுக்கிறார். ராகுல் காந்தி என்ன சொன்னாலும் எதிர்க்கிறார். ராகுல் காந்தி என்ன சொன்னாலும் அதை ஏற்றுக் கொள்ளாதவராக மோடி இருக்கிறார். ராகுல் காந்தி ஏழைகளுக்காகவும் தாய்மார்களுக்காகவும் தாழ்த்தப்பட்ட மக்களுக்காகவும் பழங்குடியினருக்காகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்காகவும் சிறுபான்மை மக்களுக்காகவும் பேசுவதை எதிர்ப்பவராக மோடி இருக்கிறார். இதுவே மோடி மீதான குற்றச்சாட்டு.
20 வருடங்களுக்கு முன்பிருந்தே இந்தியா வளர்ந்து கொண்டிருக்கும் நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றுவிட்டது. ஆனால், இந்திய மக்களின் வாழ்க்கைத்தரம் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது.
ஈரோடு தேர்தலில் அண்ணாமலை அவர்கள், தில் இருந்தால் வாயிலே வடை சுடாமல் நிற்க வேண்டும் என்று சொல்லி ஒரு மாதம் ஆகிவிட்டது. அண்ணாமலை ஈரோடு தேர்தலுக்குப் பயந்து இலங்கைக்கு பயணம் சென்றுவிட்டார். ஈரோடு பக்கமே தலைவைத்துப் படுக்காமல் இலங்கைக்கு சென்றுவிட்ட அண்ணாமலைக்கு என்னுடைய வாழ்த்துகள்.
பா.ஜ.க.வை பொறுத்தமட்டிலும் அதிமுகவை நான்கு கூறுகளாக்கிய பங்கு பாஜகவை சாரும். ஒண்ணு சசிகலா குரூப். ஒண்ணு தினகரன் குரூப். ஒண்ணு பன்னீர்செல்வம் குரூப். ஒண்ணு பழனிசாமி குரூப். அதிமுக தொண்டர்களால் மன்னிக்கக் கூடாதவர்களாக இருப்பவர்கள் பாஜககாரர்கள் தான். எந்த கட்சியும் செய்ய முடியாத சாதனையை பாஜக செய்திருக்கிறது. அதுவும் மோடி செய்திருக்கிறார். அதிமுகவை நான்கு துண்டுகளாக உடைத்திருக்கிறார்கள். பாஜகவினரை உண்மையான எம்ஜிஆர் விசுவாசிகள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அதிமுகவை அழிக்க வேண்டும், திமுகவை அழிக்க வேண்டும் என்று காங்கிரஸ் நினைப்பதாக பொய் சொல்லி பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் மோடி, எப்போதுமே ஒரு ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகராகவே இருக்கிறார். பொய்யைத் தவிர வேறு எதுவும் சொல்லாதவராக இருக்கிறார்” என்றார்.