சேலத்தில் உள்ள அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவரும், நடிகருமான சரத்குமார் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர், கஜா புயல் பாதித்த தமிழகத்தை வந்து பார்க்காத பிரதமர் நரேந்திரமோடி தேர்தல் வந்ததும் அடிக்கடி தமிழகத்திற்கு வருகிறார். பாட்டாளி மக்கள் கட்சியினர் தமிழக நிதி அமைச்சர் பற்றியும், தமிழக அரசை பற்றியும் குறை கூறி வந்தனர். அ.தி.மு.க., பா.ம.க. கூட்டணி மக்களை பற்றி சிந்திக்காமல் தங்களை மட்டுமே சிந்தித்து உருவான கூட்டணி. அதேபோல் தி.மு.க. கூட்டணியானது, அ.தி.மு.க. அமைத்த கூட்டணி போன்றது தான். இதனால் மக்கள் வெறுப்பில் உள்ளனர்.
நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் கூட்டணி சேர்ந்துள்ள கட்சிகள் எல்லாம் மக்கள் நலனில் அக்கறை இல்லாமல் கூட்டணி சேர்ந்துள்ளன. மத்திய அரசு தமிழகத்தை வஞ்சித்தது. இதனால் தான் நாங்கள் தனியாக நிற்பது என்று முடிவு செய்துள்ளோம்.
நான் அரசியலுக்கு வந்து 23 வருடங்கள் ஆகிறது. அ.தி.மு.க., தி.மு.க.வுக்காக வாக்குகளை சேகரித்து வந்துள்ளேன். தற்போது முதல் முறையாக தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தனித்து போட்டியிடும் என அறிவித்தேன். நீங்கள் எங்கள் கட்சிக்கு ஆதரவு தர வேண்டும். இவ்வாறு பேசினார்.