நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சில நாட்களுக்கு முன் தனது கட்சிக் கூடத்தில் திமுகவின் அரசியல், திராவிடக் கட்சிகளின் அரசியல், எம்ஜிஆர், ரஜினி, எடப்பாடி பழனிசாமி ஆகியோர்களையும் அவர்களுக்கு வாக்களித்த மக்களைப் பற்றியும் குற்றம்சாட்டி பேசினார். அவர் பேசியதிலிருந்து.
திமுக, கட்சியா நடத்துகிறது, அது கம்பெனியை நடத்துகிறது. பாண்டியனும், சோழனும் கூட இவ்வளவு காலம் அவர்களின் வாரிசுகள் மூலம் நம்மை ஆண்டிருக்கமாட்டார்கள். ஆனால், இங்கே முதலில் கருணாநிதி நிர்வகித்துவந்தார். அதன்பின் அவர் மகனை அந்த இடத்திற்கு வரவைத்துவிட்டார். இப்போது அவரின் வாரிசு உதயநிதி ஸ்டாலின் கிளம்பிவிட்டார். இதில் சுப.வீ போன்ற தலைவர்கள் “கட்சிக்குள் எந்த எதிர்ப்பும் இல்லாமல் ஸ்டாலினை தலைவராக கொண்டுவந்தது கருணாநிதியின் இராஜதந்திரம்” என்கிறார்கள். இது இராஜதந்திரம் இல்லை, சதி, சூழ்ச்சி. சரியான நேர்மையான தலைவர்கள்; கருணாநிதி, அண்ணா, ஜெயலலிதா, எம்ஜிஆர் சமாதிகளில் சத்தியம் செய்துவிட்டு, ஓட்டுக்கு காசு கொடுக்காமல் என்னை எதிர்த்து நின்று வென்று காட்டுங்கள் பார்ப்போம். ஆர்.கே நகரில் ஓட்டின் விலையை ஏற்றியது நாங்கள்தான். அந்த தொகுதியில் அவர்களின் கணக்கு வெறும் 500 ரூபாய்தான். ஆனால், நாங்கள் செய்த களப்பணியைப் பார்த்துவிட்டு 10,000 ரூபாய் வரை ஏற்றிவிட்டார்கள். தேர்தல் ஆணையம் போன்ற ஒரு நாடக கம்பெனி இந்த உலகத்தில் இல்லை. தேர்தலின்போது காசு கொடுத்தார்களா என்றால் ஆமாம் என்பார்கள் ஆனால் கைது செய்ய மாட்டார்கள். இதற்குள்தான் நாங்கள் புரட்சிகர அரசியலை எடுத்து, பெரும் மாறுதலை உண்டுபண்ணி, காலம் காலமாக உழைத்துக்கொண்டு இருக்கும் எங்கள் ஆத்தா, அப்பன் வாழ்வில் வெளிச்சத்தை ஏற்றிவிட முடியாதா என்று கைகளில் இரண்டு மெழுகுவத்தியை ஏந்திக்கொண்டு வருகிறோம். காசு கொடுப்பவனுக்கு இரண்டு ஓட்டு, காசு கொடுக்காதவனுக்கு (எங்களுக்கு) ஒரு ஓட்டு என்றாவது பாவம் பார்த்து ஓட்டு போட்டுவிடுங்கள். நீங்கள் போடவில்லை என்றாலும் நாங்கள் உங்களை கஷ்டப்படுத்தப்போவதில்லை.
ஸ்டெர்லைட்டிற்கு ஏன் சீமான் குரல் கொடுக்கவில்லை என்கிறார்கள். எனக்கு ஒரு குரல்தாங்க இருக்கு, நான் என்ன டப்பிங் ஆர்டிஸ்ட்டா ஊர் ஊருக்கு வந்து குரலை கொடுப்பதற்கு. ரஜினிகாந்த் திடீரென வந்து ‘சமூக விரோதிகள் ஊடுருவி விட்டார்கள்’ என்கிறார் அவர் என்னைத்தான் சொல்லுகிறார் என்பது தெரியும். அதி பயங்கரவாதிகள் நாட்டை ஆளும்போது மக்கள் எல்லாம் தீவிரவாதிகளாகவும், சமூக விரோதிகளாகவும்தான் இருப்பார்கள். சமூகமே என்னுடையதுதான், நான் ஏன் சமூக விரோதியாகப்போகிறேன். நீ தலைகீழ் நின்று தண்ணீர் குடித்தாலும் ஒரு படமும் ஓடாது.
ஒரு அக்கறையில்தான் சொல்லுகிறேன். சினிமாவில்தான் நீங்கள் பெரிய ஆள், அரசியலில் நான் எட்டு வருஷமாக இருக்கிறேன், இதில் நான் உங்களுக்கு மூத்தவன். உங்களால், உங்கள் உட்கட்சி பஞ்சாயத்தையே தீர்க்கமுடியாது. நீங்கள் ஷொட்டரை போட்டுகொண்டு இமயமலை போவதைவிட்டுவிட்டு, இதற்கு வராதீர்கள் என்று நாம் சொன்னால் கேட்பதில்லை. “நான் வருவேன் நிறைய வெற்றிடங்கள் இருக்கிறது” என்கிறார். சுடுகாட்டில் கூடத்தான் நிறைய வெற்றிடம் இருக்கிறது. இதில் நல்லவன் ஆளலாம் என்கிறார்கள். ஆம்பளையாக இருப்பவன் எல்லாம் எனக்கு அப்பனாகும் தகுதியானவன் அல்ல. என்னைப் பெத்தவன்தான் எனக்கு அப்பனாக இருக்க வேண்டும்.
சீமான், திருமாவளவன், இராமதாஸ் இவங்க எல்லாம் என்ன சாதி என்று கேட்பவர்கள், ஏன் கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதாவிடம் எல்லாம் கேட்பதில்லை. தமிழன் எவன் வந்தாலும் அவனிடம் சாதி கேட்பது. தமிழன் இல்லாத எவன் வந்தாலும் அவனை அப்படியே தலைவனாக ஏற்றுக்கொள்வது. எம்ஜிஆரிடம் சாதி கேட்டிருந்தால், அவர் ஒரு வார்டு கவுன்சிலராக ஆகியிருப்பாரா.
இந்தத் திராவிட கட்சிக்காரர்கள் எப்படி ஆட்சி செய்கிறார்கள் என்றால், தமிழர்களை கோவிலுக்கு போகாதே, சாமியை கும்பிடாதே அது முட்டாள்கள் செய்வது. பகுத்தறிவிற்கு அது ஒவ்வாதது என்று தமிழனின் வழிப்பாட்டில் இருந்து வெளியேற்றுகிறான். அதன் பிறகு அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதாவை கும்பிடவைத்துவிட்டான். எம்ஜிஆர்-க்கும் ஜெயலலிதாவுக்கும் பால் காவடி தூக்கி செல்லுகிறான் இதுவா உங்கள் பகுத்தறிவு.
முதலில் ஒரு கோஷ்டி ஜெயலலிதாவின் ஃபோட்டோவை வைத்துக்கொண்டிருந்தது. இப்போது இலை, குக்கர் என இரண்டு கோஷ்டி ஜெயலலிதாவின் ஃபோட்டோவை வைத்துக்கொண்டு சுத்துகிறது. இந்த இலையை குக்கரில் வைத்து அவிப்பதற்கு நாம் மெழுகுவத்தியை வைத்து பத்தவைத்துவிட்டு போகவேண்டியதுதான். நெஞ்சி வெடிக்க வெடிக்க, வியர்வை கொட்ட கொட்ட, முச்சந்தியில் நின்று கத்தவிட்டு விட்டீர்கள். காரணம், ஐம்பது வருஷமாக நீங்கள் சூரியன், இரட்டை இலை என்று மாறி மாறி ஓட்டு போட்டு எங்களை ரோட்டில் போட்டுவிட்டீர்கள். தயவு செய்து உங்களை கும்பிட்டு கேட்கிறேன் இனியாவது அவர்களுக்கு ஓட்டு போடாதீர்கள்.
இவர்களுக்கு ஓட்டு போட்டுக்கொண்டே இருங்கள், கைகளுக்கு கஷ்டம் வராது, குஷ்டம்தான்வரும். இந்தப் பிள்ளைகள் படிச்சதுங்க எல்லா வேலையையும் விட்டுவிட்டு இப்படி கத்துகிறார்களே, என்னதான் செய்கிறார்கள், ஒரு முறை ஓட்டு போட்டுதான் பார்ப்போம் என மனித அறிவு கொஞ்சம் சிந்திக்க வேண்டாமா.
ரஜினிகாந்துடன் படம் எடுத்தால் பரவாயில்லை, அவன் இருந்துவிட்டு எழுந்துபோன நாற்காலியில் போய் படம் பிடித்துக்கொண்டிருக்கிறாயே இதை உலகத்தில் பார்ப்பவன், இது கேடு கெட்ட இனம் என்று நினைக்கமாட்டானா. பக்கத்தில் இருக்கும் மலையாளியைப் பார்த்து கத்துக்கொள்ள வேண்டாமா. கேரளாவில் பிரேம் நஸிர் எனும் சூப்பர் ஸ்டார், ஐநூறு படங்களை நடித்துவிட்டார். ரசிகர்களை எல்லாம் மொத்தமாகக் கூட்டி ’நான் கட்சி ஆரம்பிக்கப்போகிறேன்’ என்கிறார். கூட்டத்திலிருந்து சரசரவென்று செருப்பை எடுத்து வீசிவிட்டார்கள். அதோடு எந்த நடிகனுக்கும் கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்ற ஆசையே வரவில்லை. அவனுக்கு உம்மன்சாண்டி, பினராயி விஜயன் வேறு. மம்முட்டி, மோகன்லால் வேறு என்று தெரியும். பினராயி விஜயன் சைக்கிளில் போய் முருங்கைகாய் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு போவார். எடப்பாடி ஹெலிகாப்டரில் போய்தான் மக்களையே பார்க்கிறார்.