டெல்லி சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பில் அரவிந்த் கெஜ்ரிவால் அரசு வெற்றிபெற்றுள்ளது.
டெல்லி சட்டப்பேரவையில் அரவிந்த் கெஜ்ரிவால் அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. சில நாட்கள் முன்பு தனது கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு 800 கோடி ரூபாய் வரை பேரம் பேசப்படுவதாக பாஜக மீது அரவிந்த் கெஜ்ரிவால் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். மேலும் ஆம் ஆத்மி ஆட்சியைக் கவிழ்க்க தொடர்ந்து பல இடையூறுகளையும் பாஜக செய்வதாகக் குற்றம் சாட்டி இருந்தார்.
இதனைத் தொடர்ந்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சட்டமன்றத்தில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முன் மொழிந்தார். அந்த தீர்மானம் இன்று நிறைவேற்றப்பட்டது. 70 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவையில் ஆளும் கட்சியான ஆம் ஆத்மிக்கு 62 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். பாஜகவிற்கு 8 சட்ட மன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.
இன்று நடந்த நம்பிக்கைக்கோரும் வாக்கெடுப்பில் 62 ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்களில் 58 பேர் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு அனைவரும் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக வாக்களித்தனர். மீதமுள்ள 4 பேரில் இருவர் வெளிநாடுகளிலும், ஒருவர் சிறையிலும் உள்ளதால் அவர்கள் வாக்களிக்கவில்லை. இதன்மூலம் இன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அரவிந்த் கெஜ்ரிவால் பெரும் வெற்றி பெற்றார்.