பெரியாருக்கு 100 கோடியில் சிலை வைத்தால் பெரியார் தடியாலேயே அடித்திருப்பார் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். பெரியாரின் 49 ஆவது நினைவு நாளை ஒட்டி இன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் மரியாதை செலுத்தப்பட்டது. இதன் பின் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “பெரியார் சிலையை வைத்து எப்படி பெரியாரின் புகழை பரப்புவீர்கள். பெரியார் கருத்தியலை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். கருத்தியலை பரப்ப திராவிடம் என்ற பெயர் வேண்டியது இல்லை. அதற்கு அவரது கருத்துக்களே ஏராளம் உள்ளது. வல்லபாய் படேலுக்கு 3000 கோடியில் சிலை வைத்தற்கும் பெரியாருக்கு 100 கோடியில் சிலை வைத்ததற்கும் என்ன வேறுபாடு உள்ளது.
அவர் பணத்தை சேமித்து சேமித்து அறக்கட்டளையை உருவாக்கினார். அவருக்கு 100 கோடியில் சிலை என்றால் அந்த தடியாலே அடிப்பார். பெரியாரை அவமானப்படுத்துவதா இல்லை பெருமைபடுத்துவதா? நான் இறந்ததும் நூறு கோடியில் சிலை வைப்பார்கள் என நினைத்து போராடினாரா? முன்னோர்கள் போராடியது எல்லாம் சிலை வைப்பார்கள் மாலை போடுவார்கள் என்றா போராடினார்கள்.
வல்லபாய் படேல் சிலையைப் பெரிதாக வைத்துவிட்டீர்கள். சிங்கப்பூரில் சென்று கேளுங்கள். யார் எனக் கேட்பார்கள். காந்தி, அம்பேத்கரை தெரியும். அவர்கள் தான் இந்தியாவின் அடையாளம். சிலை புகழ் சேர்க்காது. சிந்தனை தான் புகழ் சேர்க்கும்” எனக் கூறினார்.