Skip to main content

''ஆளுநர் உண்மைக்குப் புறம்பாகப் பேசுவதையே உறுதிமொழியாக ஏற்றுள்ளார்'' - உ.வாசுகி பேச்சு

Published on 11/07/2023 | Edited on 11/07/2023

 

"The governor has taken an oath to speak untruths"- U. Vasuki speech

 

சிதம்பரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ‘வள்ளலார் - 200’ சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு கட்சியின் சிதம்பரம் நகர செயலாளர் எஸ்.ராஜா தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கட்சியின் மத்திய குழு உறுப்பினர் உ.வாசுகி பங்கேற்று வள்ளலாரின் வாழ்வியல் நெறிமுறைகள் குறித்து பேசினார்.

 

அவர் பேசுகையில், ''இன்றைய அரசியல் சூழலில் எவ்வாறு தெளிவாக இருக்க வேண்டும் என்பதற்கான எடுத்துக்காட்டாக இந்தக் கருத்தரங்கம் அமைந்துள்ளது. தமிழக ஆளுநர் உண்மைக்குப் புறம்பாகப் பேசுவதையும், நடப்பதையும், உறுதிமொழி எடுத்துச் செயல்படுத்தி வருகிறார். வள்ளலார் சனாதனத்திற்கு எதிராகக் குரல் கொடுத்தவர். சனாதனத்திற்கு எதிரான கருத்துகளை மக்கள் மத்தியில் பரப்புரை செய்தவர். இவரை சனாதனத்தின் உச்சம் என ஆளுநர் ரவி பொய்யாகப் பேசியுள்ளார். ஒன்றியத்தில் சனாதனத்தை உயர்த்திப் பிடிப்பவர்கள்தான் ஆட்சியில் உள்ளனர்.

 

வள்ளலார் சமரச சுத்த சன்மார்க்கம்தான் உண்மையான வாழ்க்கைநெறியென மிகப்பெரிய அளவில் குரல் கொடுத்தார். ஆனால், பாஜகவினரின் கருத்துகள், செயல்பாடுகள் வள்ளலாருக்கு எதிராகப் போய்க் கொண்டிருக்கிறது என்பதை மறந்துவிடக்கூடாது. மோடியின் ஆட்சியில் பசியையும் வறுமையும் ஏற்படுத்தக்கூடிய பொருளாதாரக் கொள்கைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. பசி, வறுமை கணக்கெடுப்பில் 127 உலக நாடுகளில் 107வது இடத்தில் இந்தியா உள்ளது. சாதி, சமயம், மூடநம்பிக்கை மதங்களை வள்ளலார் கிண்டல் செய்து விமர்சித்துள்ளார். ஆனால், மோடி அரசு இவற்றை மூலதனமாகக் கொண்டு செயல்படுகிறது. 

 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வள்ளலார் வகுத்துள்ள கொள்கைகள், பாதைகள், தத்துவத்திற்கு ஏற்ப தன் நடவடிக்கைகளை அமைத்துக் கொண்டிருக்கிறது. வள்ளலார் சொல்வது போல் மதவெறி அரசியலை நிராகரிப்பதில் முன்வரிசையில் மார்க்சிஸ்ட் கட்சி உள்ளது. சனாதன எதிர்ப்பில் வலுவாக உள்ளது. வள்ளலார் சொல்லுகிற மனித உயிர்கள் பாதுகாக்கப்பட வேண்டும், அன்பு செலுத்தப்பட வேண்டும், அனைத்து மக்களும் எந்த சாதி, மதமாக இருந்தாலும் அடிப்படைக் கல்வி, வேலைவாய்ப்பு பெற்று கண்ணியமான ஒரு வாழ்க்கை வாழ வேண்டும் என்பதற்காக கொள்கை வகுத்து போராட்டக்களத்தில் நிற்கக்கூடிய கட்சியாக மார்க்சிஸ்ட் கட்சி உள்ளது.

 

மேலும், பெண்களும் குழந்தைகளும் வன்முறைகளால் பாதிக்கப்படும்போது முதலில் களத்தில் இறங்குவது மார்க்சிஸ்ட் கட்சி தான். அதனால்தான் வள்ளலார் விட்டுச்சென்ற இப்படிப்பட்ட சமரச சுத்த சன்மார்க்க நெறிமுறைகளை பொதுவுடைமை தத்துவத்தோடு இணைத்து தமிழகத்தில் அப்படிப்பட்ட பாதையில் சென்று கொண்டிருக்கிற இயக்கமாக செங்கொடி இயக்கம் இருக்கிறது” எனப் பேசினார்.

 

இதனைத் தொடர்ந்து கட்சியின் மாவட்ட செயலாளர் ஜி.மாதவன், மாநில குழு உறுப்பினர் எஸ்.ஜி ரமேஷ் பாபு, முன்னாள் செயற்குழு உறுப்பினர் மூசா, செயற்குழு உறுப்பினர் தேன்மொழி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு பேசினார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட குழு உறுப்பினர்கள் பிரகாஷ், வாஞ்சிநாதன், விஜய், செல்லையா, மனோகர், ஸ்டாலின், ஆழ்வார், ஜெயசித்ரா மற்றும்  நகரக்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

 


 

சார்ந்த செய்திகள்