மூன்றாவது முறையாக விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக களம் இறங்கியிருக்கிறார் மாணிக்கம் தாகூர். அவருக்கு ஆதரவாக மதுரை மாவட்டம் திருமங்கலம் தேவர் திடலில் திறந்த வேனில் பிரச்சாரம் செய்தார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ. வழக்கம்போல் அவரது பேச்சில் அனலின் தாக்கம் அதிகம் இருந்தது. ரஃபேல் விவகாரம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் பிரச்சனை, குஜராத் கலவரம் என பிரதமர் நரேந்திர மோடியை ஒரு பிடி பிடித்த அவர், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசையும் விட்டு வைக்கவில்லை.
வைகோ பேசப்பேச, பக்கத்தில் நின்ற மாணிக்கம் தாகூர் அவர் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தார். உணர்ச்சி கொப்பளிக்கும் வைகோ பேச்சைக் கேட்ட மாணிக்கம் தாகூர் நெகிழ்ந்தார். அந்நேரம் ‘2009-ல் இந்த வைகோவையா என்னால் வெல்ல முடிந்தது?’ என்று உள்ளுக்குள் நிச்சயம் நினைத்திருப்பார். ஏனென்றால், மாணிக்கம் தாகூரின் முகபாவம் அப்படித்தான் இருந்தது. 2014 தேர்தலிலும் மாணிக்கம் தாகூர் இதே விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டார். வைகோவும் போட்டியிட்டார். இருவருமே தோல்வியைத் தழுவினார்கள்.
2009-ல் எந்த மாணிக்கம் தாகூரால் வெற்றி வாய்ப்பை இழந்தாரோ, அதே மாணிக்கம் தாகூருக்காக 2019-ல் வாக்கு கேட்கிறார் வைகோ. காலச்சக்கரம் எப்படியெல்லாம் சுழல்கிறது.