காவிரியில் இருந்து தமிழகத்திற்குத் தரவேண்டிய தண்ணீரை தர கர்நாடக அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. இந்த நிலையில் காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம் தலைவர் வினீத் குப்தா தலைமையில் காணொலி வாயிலாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகம் உள்ளிட்ட 4 மாநில அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
அப்போது, கடந்த ஆண்டு ஜூன் 1 ஆம் தேதி முதல் கடந்த மாதம் வரை பிலிகுண்டுலுவில் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 174 டி.எம்.சி நீரில் 78 டி.எம்.சி நீரை மட்டுமே கர்நாடகம் தந்துள்ளது. மீதம் உள்ள 95 டி.எம்.சி நீரை வழங்காமல் உள்ளது. அதேபோன்று இந்தாண்டு பிப்ரவரி 1 ஆம் தேதியில் இருந்து ஏப்ரல் 28 ஆம் தேதி வரை பிலிக்குண்டுலுவில் கிடைக்க வேண்டிய சுற்றுச்சூழல் நீரின் அளவான 7.333 டி.எம்.சி தண்ணீர் முழுமையாகக் கிடைக்கவில்லை. 2.016 மட்டுமே கொடுத்துள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அதேசமயம், கர்நாடக அணைகளில் தற்போது இருக்கும் நீர் கர்நாடக மக்களின் குடிநீர் தேவைக்காக மட்டுமே போதுமானதாக இருக்கும். அதனால் தமிழகத்திற்குத் தண்ணீர் வழங்கவே முடியாது என்று திட்டவட்டமாக கர்நாடக தரப்பில் கூறப்பட்டுள்ளது. இரு தரப்பு வாதங்களை கேட்ட காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம் தலைவர் வினீத் குப்தா உச்சநீதிமன்ற உத்தரவின்படி மே மாதம் வழங்க வேண்டிய 2.5 டி.எம்.சி நீரை கர்நாடக அரசு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி அடுத்த கூட்டத்தை வரும் 16 ஆம் தேதி நடைபெறும் என்று கூறினார்.
இந்த நிலையில் இது தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் துரைமுருகன், “என்றைக்காவது தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்து விடுவோம் என்று கர்நாடக அரசு சொல்லி இருக்கிறதா? தண்ணீர் இருந்தாலும் அதே தான் சொல்வார்கள் தண்ணீர் இல்லை என்றாலும் அதை தான் சொல்வார்கள். காவிரி ஆணையத்தின் உத்தரவை கூட கர்நாடக அரசு மதிக்காமல் இருக்கிறது. தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசின் நடவடிக்கையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை நாட உள்ளோம்” என்றார்.