உலகமே எதிர்பார்த்த இந்தியாவின் 18வது மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற்றது. தேர்தல் முடிந்த பிறகு இந்தியாவில் உள்ள முக்கிய செய்தி நிறுவனங்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட்டன. அதில், பா.ஜ.க தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 350க்கும் மேற்பட்ட தொகுதிகளையும், இந்தியா கூட்டணி 150க்கும் குறைவான தொகுதிகளையும் என்று கூறியிருந்தது.
இதனையடுத்து, கடந்த 4ஆம் தேதி மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியானது. அதில், 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றுள்ளது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பா.ஜ.க தனித்து 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தாலும், கூட்டணிக் கட்சிகளின் தயவால் பா.ஜ.க கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சியை அமைக்கவுள்ளது. அதே சமயம் தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி மொத்தம் உள்ள 39 இடங்களையும் வென்றது. புதுச்சேரியின் ஒரு தொகுதியில் காங்கிரஸ் கட்சி வென்றது.
இந்நிலையில் இந்நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைமையகமான சென்னை, சத்தியமூர்த்தி பவனில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் எம்.பி. செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் 400 இடங்களை இலக்கு வைத்த பாஜக மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. இந்தியா கூட்டணி தோல்வி அடையவில்லை வெற்றி அடைந்துள்ளது. தேர்தலில் காங்கிரஸுக்கு தார்மீக வெற்றி கிடைத்துள்ளது. அதனால் நாங்கள் கொண்டாடுகிறோம். அதில் மோடிக்கு என்ன பொறாமை?. தார்மீக தோல்வி பாஜகவுக்கும், பிரதமர் மோடிக்கும் தான். வேண்டுமானால் அவர்களும் கொண்டாடட்டுமே யார் வேண்டாம் என்றது?. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பொறுத்தவரை மேம்படுத்த வேண்டும் என்பது தான் எங்களுடைய கோரிக்கை.
3 வது முறையாகப் பிரதமராகும் நரேந்திர மோடிக்கு என்னுடைய வாழ்த்துக்கள். மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவுடன் பிரதமர் மோடி ஒப்பிட்டுக் கொள்கிறார். அதனை நாங்கள் நிராகரிக்கிறோம். அதனை இந்த நாட்டு மக்களும் நிராகரிப்பார்கள். பாஜகவின் ஒரு மனித ஆட்சியின் நிலை தற்பொழுது கூட்டணி சேர்த்து ஆட்சி அமைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. பாஜக ஆட்சி நிலைக்குமா? என்பதைக் காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் மக்களை முட்டாளாக்கியுள்ளது. கருத்துக் கணிப்பு என்ற பெயரில் கருத்துத் திணிப்பு நடத்தப்பட்டு, மக்கள் தவறாக வழிநடத்தப்பட்டனர். தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் அனைத்தும் தவறானது. கருத்து கணிப்பு அனைத்தையும் ஒரே இடத்தில் தயாரித்து ஊடகங்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களும் பாஜக 350 தொகுதிகளைப் பெறும் என ஒரே மாதிரி சொன்னது எப்படி?.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலின் முடிவுகள் அனைத்து கட்சியினருக்கும் படிப்பினைதான். சில மாநிலங்களில் காங்கிரஸுக்கு ஏற்பட்டுள்ள தோல்வி எங்களுக்கு படிப்பினையாக உள்ளது” எனத் தெரிவித்தார். இந்தச் செய்தியாளர் சந்திப்பின் போது தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான கு.செல்வப்பெருந்தகை, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் எம்.எல்.ஏ. ஆகியோர் உடன் இருந்தனர்.