கமல்ஹாசன் எங்கள் கூட்டணிக்கு வந்தால் வரவேற்போம் என்று சஞ்சய் தத் கூறியுள்ளார்.
நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி அலவலகத்தில் காங்கிரஸ் தேசிய செயலாளரும், தமிழக மேலிட பார்வையாளருமான சஞ்சய் தத் செவ்வாய்க்கிழமை பேட்டி அளித்தார்.
அப்போது அவர், ராகுல் காந்தி பிரதமர் ஆவது குறித்து தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பை காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது. பா.ஜனதாவுக்கு எதிராக ராகுல் காந்தி மற்றும் ஸ்டாலின் ஆகியோர் இணைந்திருப்பது காங்கிரசுக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுத்தரும். தமிழகத்தில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அமோக வெற்றி பெறும்.
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் எங்கள் கூட்டணிக்கு வந்தால் வரவேற்போம். கூட்டணிக்கு வருவது அவருடைய விருப்பம். பாசிச ஆட்சிக்கு எதிரான கொள்கைகளை உடைய கட்சிகள் காங்கிரஸ் கட்சியுடன் ஒன்று சேரும்.
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் பணிகளை காங்கிரஸ் கட்சி தொடங்கி உள்ளது. தற்போது ராகுல்காந்தி உத்தரவுப்படி பூத் கமிட்டி நிர்வாகிகளை நியமிக்கும் பணிகள் தொடர்பாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறேன் என்றார்.
இதனைத் தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் தேர்தல் பணியில் கட்சி சார்பில் பூத் கமிட்டி அமைத்திருப்பது தொடர்பாக வார்டு வாரியாக நிர்வாகிகளை சந்தித்து சஞ்சய் தத் ஆலோசனை நடத்தினார்.
முன்னாள் எம்.பி. ராமசுப்பு, முன்னாள் எம்.எல்.ஏ. சுடலையாண்டி, முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன், வசந்தகுமார் எம்.எல்.ஏ., நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன், கிழக்கு மாவட்ட தலைவர் எஸ்.கே.எம்.சிவகுமார் உள்ளிட்டோர் இந்த ஆலோசனையில் கலந்து கொண்டனர்.