குடியுரிமை சட்ட மசோதாவிற்கு எதிராக சென்னை சைதாப்பேட்டையில் தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்காக சைதாப்பேட்டை பஜார் சாலையில் இருந்து ஏராளமான இளைஞரணியினர் கொடி ஏந்தி ஊர்வலமாக புறப்பட்டனர். உதயநிதி ஸ்டாலினும் இந்த பேரணியில் கலந்து கொண்டு நடந்து சென்றார். சைதாப்பேட்டை கலைஞர் வளைவு அருகே பேரணி சென்றதும் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மேடையில் ஏறி அரசுக்கு எதிராக கண்டன முழக்கம் எழுப்பினர். அதன்பிறகு மேடையை விட்டு இறங்கி உதயநிதி ஸ்டாலின் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டார். மறியலில் ஈடுபட்டதும் அவரை போலீசார் கைது செய்தனர்.
அப்போது உதயநிதியை திமுக பொருளாளர் துரைமுருகன் சந்தித்துவிட்டு வந்த செய்தியாளர்களிடம் பேசும் போது, "சிறுபான்மையினரை பழிதீர்க்கும் வகையிலும், மதத்தை படுத்துகிற வகையிலும் இந்த குடியுரிமை திருத்த சட்டம் அமைந்து உள்ளது. இந்த சட்டமானது இலங்கையில் இருந்து குடிபெயர்ந்து வந்து அகதிகளாக வாழ்கிற தமிழர்களையும், இஸ்லாமிய சமுதாயத்தினரையும் இந்திய குடிமக்களாக ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று தெரிவிக்கின்றது. எனவே, இந்த சட்டம் புதிதானது என்பதால் புறக்கணிக்கப்பட வேண்டிய ஒன்றுதான். இந்த வெறுப்பை காட்டுவதற்காகத்தான் திமுக இளைஞரணி உதயநிதி தலைமையில் அந்த சட்ட நகலை தெருவில் கிழித்து எறிந்தனர். ஆனால், தற்போது இவர்கள் கைது செய்து அடைக்கப்பட்டு வைக்கப்பட்டிருக்கின்றனர். திமுகவின் இளைஞர் அணி பட்டாளம் வீறு கொண்டு எழுந்து உள்ளது. இதனை அடக்கும் சக்தி இந்த அரசுக்கு கிடையாது. மேலும் இந்த எடப்பாடி அரசுக்கும் சட்டமும் தெரியாது என்று கோபமாக பேசியுள்ளார்.