மருத்துவ இட ஒதுக்கீட்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,
மருத்துவக் கல்லூரிகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பது குறித்து முடிவெடுக்க இன்னும் 3 வாரங்கள் ஆகும் என ஆளுனர் மாளிகை வட்டாரங்கள் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இவை உண்மையென்றால் 3 வார அவகாசம் காலம் தாழ்த்தும் முயற்சியே!
7.5% இட ஒதுக்கீடு சட்டம் குறித்து அதிகபட்சமாக ஒரு நாளில் சட்ட ஆலோசனை பெற்று முடிவெடுக்க முடியும். ஆனால், முதன்முதலில் இதற்கான பரிந்துரை ஜூன் 15-ஆம் தேதி ஆளுனருக்கு அனுப்பப்பட்டு, 4 மாதங்கள் ஆகும் நிலையில் இன்னும் ஆலோசனை நடத்துவதாகக் கூறுவதை நம்ப முடியவில்லை!
அரசுப் பள்ளிகளில் பயிலும் கிராமப்புற ஏழை மாணவர்கள் மருத்துவர்களாகி விடக் கூடாது என்ற எண்ணமும், எங்கிருந்தோ அளிக்கப்படும் அழுத்தமும் தான் இந்த தாமதத்திற்கு காரணமாக இருக்க வேண்டும். ஒவ்வொரு நாள் தாமதமும் பெரும் அநீதியை விளைவிக்கும்!
நவம்பர் இறுதிக்குள் மருத்துவ மாணவர் சேர்க்கையை முடிக்க வேண்டும் என்று MCI உத்தரவிட்டால், மாணவர் சேர்க்கையை விரைந்து தொடங்க வேண்டும் என்ற அழுத்தங்கள் எழும் அல்லது எழுப்ப வைக்கப்படும். அப்படி ஒரு நிலை ஏற்படுத்தப்படுவதைத் தான் அதிகார மையங்கள் விரும்புகின்றனவோ?
அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு கைவிடப்படக்கூடும் என்று நினைப்பதே பெரும் பாவம். அதற்கெல்லாம் இடம் கொடுக்காமல் 7.5% இட ஒதுக்கீடு சட்டத்திற்கு ஆளுனர் மாளிகை உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும்! இவ்வாறு ட்வீட் செய்துள்ளார்.