Skip to main content

பாஜக துணிச்சல் காங்கிரசுக்கு இருக்கிறதா? - திமுகவின் கமெண்டால் காங்கிரஸ் அப்செட்

Published on 01/02/2022 | Edited on 01/02/2022

 

DMK Comment on Congress

 

நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான தேர்தலுக்கு மனு தாக்கல் செய்ய இன்னும் 3 நாட்களே அவகாசம் இருக்கிறது. 4ம் தேதி கடைசி நாள். இருப்பினும் இதுவரை திமுக கூட்டணி கட்சிகளுக்கு சீட் பங்கீடு செய்வதில் இழுபறியே நீடிக்கிறது. 

 

திமுகவின் மாவட்டச் செயலாளர்களிடம் கலந்து பேசி தங்களுக்குரிய இடங்களை முடிவு செய்து கொள்ளுங்கள் எனக் காங்கிரஸ் உள்ளிட்ட தனது தோழமைக் கட்சிகளுக்கு ஏற்கனவே அறிவுறுத்தி விட்டது திமுக தலைமை. இந்த நிலையில், கடந்த 5 நாட்களாக நடந்த பேச்சுவார்த்தையில் சுமூகமான சூழல் எட்டப்படவில்லை. கரூர், திருச்சி, திண்டுக்கல், தூத்துக்குடி, நெல்லை, திருப்பூர், கன்னியாகுமரி, சிவகங்கை, சென்னை எனப் பெரும்பாலான மாவட்டங்களில் திமுகவுக்கும் காங்கிரசுக்குமிடையே மன வருத்தங்கள்தான் ஏற்பட்டன.

 

மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர் ஆகிய பதவிகளில் குறிப்பிட்ட இடங்களைத் தங்களுக்கு விட்டுக் கொடுப்பது உட்பட காங்கிரஸ் கேட்கும் எண்ணிக்கையையும், காங்கிரஸ் கேட்கும் வார்டுகளையும் ஒதுக்க திமுக மறுத்து வருவதே இழுபறிக்கு காரணம். இந்த நிலையில், தன்னுடைய ஒப்புதல் இல்லாமல் எந்த ஒப்பந்தத்திலும் கையெழுத்துப் போடக்கூடாது என மாவட்ட காங்கிரஸ் தலைவர்களுக்கு உத்தரவு போட்டிருந்தார் காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி. இதனாலும் உடனடி உடன்பாடுகள் எட்டப்படவில்லை. 

 

இது குறித்து டெல்லி தலைமைக்குத் தகவல் அனுப்பியிருந்தார் கே.எஸ். அழகிரி. இதனையடுத்து திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக நிலையை எட்டுவதற்காக கேரளாவைச் சேர்ந்த ரமேஷ் சென்னிதாலாவை சென்னைக்கு அனுப்பி வைத்தது காங்கிரசின் அகில இந்திய தலைமை. அவரும் சென்னைக்கு வந்துள்ளார்.

 

இந்த நிலையில், “காங்கிரசுக்கென்று பாரம்பரிய வாக்கு வங்கி தமிழகம் முழுவதும் இருக்கிறது. அதிக எண்ணிக்கையில் போட்டியிட காங்கிரஸ் தொண்டர்கள் விரும்புகிறார்கள். கட்சியை வளர்க்க நாங்களும் அதிக இடங்களில் போட்டியிட வேண்டும். அதனால், கௌரவமான எண்ணிக்கையில் இடங்களை எங்களுக்கு திமுக ஒதுக்க வேண்டும்’’ என்று திமுக தலைவர் ஸ்டாலினிடமும், பொதுச்செயலாளர் துரைமுருகனிடமும் கோரிக்கை வைத்திருக்கிறார் அழகிரி.

 

அப்போது, “ஒவ்வொரு கட்சியும் வளர்ச்சியடைய விரும்புவது இயல்பானதுதான். காங்கிரசின் எதிர்பார்ப்பினையும் எண்ணங்களையும் தவறு எனச் சொல்லவில்லை. கட்சியை வளர்க்க அதிக இடங்களில் போட்டியிட வேண்டுமாயின் பாஜகவைப்போல காங்கிரசும் தனித்து போட்டியிடலாமே. பாஜகவுக்கு இருக்கும் துணிச்சல் காங்கிரசுக்கு ஏன் இல்லை? தனித்து போட்டியிட காங்கிரஸ் முடிவு செய்யட்டும்” என்று காங்கிரசுக்கு அட்வைஸ் பண்ணியிருக்கிறார் துரைமுருகன். ஆனால், காங்கிரசை துரைமுருகன் நக்கல் செய்வதாகக் காங்கிரஸ் கோபம் கொண்டிருக்கிறது. இதையெல்லாம், பொருட்படுத்தாமல் திமுக தலைமையிடம் பேசி எப்படியும் கூட்டணியைத் தொடர முயற்சித்து வருகிறார்கள் காங்கிரஸ் தலைவர்கள். 

 

இது ஒருபுறமிருக்க, திமுக கூட்டணியில் போட்டியிடும் தோழமைக் கட்சிகள் தங்களின் வேட்பாளர்களைத் தேர்வு செய்யும்போது குற்றப்பின்னணி இல்லாதவர்களாகப் பார்த்து வாய்ப்பளிக்க வேண்டும் என்று கூட்டணிக் கட்சிகளை வலியுறுத்தியுள்ளது திமுக தலைமை. ஆனால், இது குறித்து கவலைப்படாமல் சில பேரங்களின் அடிப்படையில் வேட்பாளர்கள் தேர்வு காங்கிரசில் நடந்து கொண்டிருக்கிறது என்கிறார்கள் கதர்சட்டையினர்.

 

 

சார்ந்த செய்திகள்