
மத்திய அமைச்சரின் பேத்தி துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசாங்கத்தில் மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்து வருபவர் ஜிதன் ராம் மஞ்சி. பீகார் மாநிலத்தின் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சித் தலைவராக பொறுப்பு வகித்து வரும் ஜிதம் ராம் மஞ்சி, பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கிறார்.
மத்திய அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சியின் பேத்தி சுஷ்மா தேவி, தனது குழந்தைகள் மற்றும் சகோதரி பூனம் குமாரியோடு பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில் உள்ள டெட்டுவா கிராமத்தில் வசித்து வந்தார். இந்த நிலையில், இன்று (09-04-25) பூனம் குமாரியும் சுஷ்மா தேவியின் குழந்தைகளும் ஒரு அறையில் இருந்தனர். தனியாக சுஷ்மா தேவி இருந்த பக்கத்து அறையில் திடீரென்று துப்பாக்கி சத்தம் கேட்டுள்ளது. இதனை கேட்ட பூனம் குமாரி, அந்த அறையில் சென்று பார்க்கையில், ரத்த வெள்ளத்தோடு சுஷ்மா தேவி உயிரிழந்து கிடந்தார்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பூனம் குமாரி, உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், உடலை மீட்டு உடனடியாக பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் நடந்த தினத்தன்று, சுஷ்மா தேவிக்கும் அவரது கணவர் ரமேஷுக்கும் இடையே சண்டை நடந்ததாகவும், ரமேஷ் தான் சுஷ்மா தேவியை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்திருப்பதாகவும் சகோதரி பூனம் குமாரி பரபரப்பு குற்றச்சாட்டு வைத்துள்ளார். அந்த குற்றச்சாட்டின் அடிப்படையிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.